Chennai Youth Death : ஆற்றில் மூழ்கி பலியான இளைஞர்கள்.. கண்ணீர் கடலில் சென்னை நேரு பார்க் குடியிருப்பு.. முதல்வர் இரங்கல்

CM Stalin Condolence To Chennai Youths Death at Kollidam River : வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சென்னை இளைஞர்கள் 5 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Sep 10, 2024 - 14:49
Sep 11, 2024 - 09:49
 0
Chennai Youth Death : ஆற்றில் மூழ்கி பலியான இளைஞர்கள்.. கண்ணீர் கடலில் சென்னை நேரு பார்க் குடியிருப்பு.. முதல்வர் இரங்கல்
CM Stalin Condolence To Chennai Youths Death at Kollidam River

CM Stalin Condolence To Chennai Youths Death at Kollidam River : வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள 5 சவப்பெட்டிகள் சென்னை எக்மோர் நேரு பார்க் குடியிருப்புவாசிகளை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. மகிழ்ச்சியோடு சுற்றுலா சென்றவர்கள் இப்படி சடலமாக திரும்பி வருவார்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மாதாவை தரிசிக்க போன இடத்தில் ஆற்றில் குளிக்கப்போய் உயிரை இழந்துள்ளனர் 5 இளைஞர்கள். ஏன் இப்படி நடந்தது வாழ வேண்டிய இளைஞர்களை காலன் கொண்டு போனது எப்படி என்று பார்க்கலாம். 

சென்னை சேத்துப்பட்டு நேரு பூங்கா அருகே ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன்கள் பிராங்களின்,23 ஆண்டோ ஜான்சன்,20. இவர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் பிராங்களின் நண்பர்கள் கிஷோர் (எ)தமிழரசன்,20, சென்னை சோலைப் பகுதியைச் சேர்ந்த  கலைவேந்தன் , ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோகர் உட்பட 18 பேர், வேன் ஒன்றில் கடந்த 6ஆம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு திருவிழாவுக்காக புறப்பட்டு சென்றனர்.

வேளாங்கண்ணி திருவிழா முடிந்த பின்னர் 8ஆம் தேதி ஞாயிறுக்கிழமை காலை 7 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் அமைந்துள்ள அன்னை மரியா தேவாலயத்திற்கு வழிபாட்டிற்காக வந்தனர். தொடர்ந்து 9 மணியளவில் தேவாலயம் அருகே சமையல் செய்துள்ளனர்.அப்போது பிராங்களின், ஆண்டோ, கிஷோர், கலைவேந்தன்,மனோகர் ஆகிய ஐந்துபேர் மட்டும் கோயில் அருகே ஓடும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர்.  

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகளவு ஓடும் நிலையில் குளித்து கொண்டு இருந்த போது  எதிர்பாராதவிதமாக ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கினர். வெகுநேரமாகியும் 5 பேரும் கரைக்கு வரவில்லை. குளிக்க சென்ற மகன்களும், அவரது நண்பர்களும் இன்னும் காணவில்லையே என்று  அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஆற்றில் உள்ள மண் திட்டில் கலைவேந்தன் மற்றும் கிஷோர் இருவரும் இறந்த நிலையில் கிடந்தனர். 

இதை பார்த்து ஜான்சன் மற்றும் உறவினர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனையடுத்து  திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய  பிரங்கிளின், ஆண்டோ, மனோகர் ஆகிய மூவரையும் தேடினர். மேலும், திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் தேடினர்.

பல மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மதியம்  கொள்ளிடம் ஆற்றில் சற்று தூரத்தில் இறந்த நிலையில் மனோகர் உடலை மீட்டனர். ஆனால் பிராங்களின், ஆண்டோ ஆகிய இருவரின் நிலை என்ன ஆனது என்று தெரியாத நிலை இரவு வரை நீடித்தது. இரவு ஆன போதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
2வது நாளாக நேற்று இருவரது உடல்களையும் போலீசார் தேடினர். இதில் பிராங்கிளின் உடல் மீட்கப்பட்டது.மாலையில் ஆண்டோ உடல் மீட்கப்பட்டது.

தகவலறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்றிரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு உயிரிழந்தவர்களின் உடல்கள்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் உள்ள நேரு பார்க் குடியிருப்புக்கு 5 பேரின் உடல்களும் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று இளைஞர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியோடு பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார். அனைவரின் உடல்களும் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு கல்லறையில் அருகருகே புதைக்கப்பட்டது. 

இதனிடையே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 5 இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை, எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா ஆலயத்துக்கு சென்றுவிட்டு செப்.8ம் தேதி அன்று முற்பகல் திருச்சி-செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கிழக்குப் பகுதியில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, கிஷோர் (20); கலைவேந்தன் (19); ஆண்டோ (21) ; பிராங்கிளின் ( 23) ; மனோகர் (19) ஆகிய ஐந்து நபர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow