மாநாடுக்கு தயாராகும் விஜய்.. நிர்வாகிகளுடன் பரபர ஆலோசனை.. பொறுப்பாளர்கள் நியமனம்

திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. அதில், கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை விஜய் வெளியிட உள்ள நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.

Sep 9, 2024 - 15:56
Sep 9, 2024 - 19:14
 0
மாநாடுக்கு தயாராகும் விஜய்.. நிர்வாகிகளுடன் பரபர ஆலோசனை.. பொறுப்பாளர்கள் நியமனம்
vijay manadu

தவெக மாநாடு நடத்துவது குறித்து நடிகரும் தலைவருமான விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் நிர்வாகிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக, சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்தார். இதைதொடர்ந்து, இந்த மாதம் அந்த கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மாநாட்டிற்கான அனுமதி கோரி, தவெக சார்பில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜிடம் மனு அளிக்கப்பட்டது. வரும் 23ம் தேதி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

மாநாடு அனுமதிக்கான கடிதத்தினை தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி விழுப்புரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷிடமிருந்து பெற்றுக்கொண்டார். 33 நிபந்தனைகளுடன் சீலிடப்பட்ட கவரில் இந்த அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மாநாடு நடத்தப்படுவதால் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறு ஏற்படக்கூடாது என்றும் காவல்துறை அனுமதித்த இடங்களை தவிர வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று உள்ளிட்ட 33 நிபந்தனைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி வட்டாரத்தின் அழுத்தம் காரணமாகவே, விஜயின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் நிபந்தனைகளுடன் விஜய் கட்சி மாநாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சீல் வைத்து வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகளை தலைவர் விஜய் வெளியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர்.மாநாட்டுக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தவெகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதையடுத்து திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை விஜய் வெளியிடுவார் என கருதப்படுகிறது.

முன்னதாக மாநாடு குறித்த விஜய் வெளியிட்ட அறிவிப்பில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மாநாட்டை நடத்துவது குறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். நீலாங்கரையில் உள்ள வீட்டில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.வரும் 23ஆம் தேதி மாநாடு நடத்த முடியுமா என்றும் அதற்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மாநாட்டை இந்த மாதத்திற்குள் நடத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் சிலர் மாநாட்டின் போது விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

த வெ க மாநாடு திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என்றும் மாநாட்டுக்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் விஜய் பேசியுள்ளாராம். மாநாட்டிற்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து வர  பொறுப்பாளார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகளை அழைத்து வரும் முழு பொறுப்பையும் பொறுப்பாளர்கள் ஏற்க வேண்டும் எனவும்  விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow