பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தகராறு.. மண்டை உடைந்த 4 பேர் மருத்துமனையில் அனுமதி
சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் 4 ஊழியர்கள் தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
![பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தகராறு.. மண்டை உடைந்த 4 பேர் மருத்துமனையில் அனுமதி](https://kumudamnews.com/uploads/images/202411/image_870x_673402675ba10.jpg)
சென்னை தி.நகரில் அமைந்துள்ள போத்தீஸ் ஹைப்பர் துணிக்கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், தி.நகர் மோதிலால் தெருவில் உள்ள விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த விடுதியில் தங்கியிருந்த ஊழியர்கள், துணிக்கடை ஊழியர்கள், விடுதி சமையல் பணியாளர்கள் என இரு பிரிவாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், இரு பிரிவினரும் மாறி, மாறி தங்களுக்குள் கை, கட்டை மற்றும் கையில் கிடைத்த பொருட்களை வைத்து தாக்கி கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் விடுதியின் சமையல் ஊழியர்களான இளவரசன், கலையரசன், சிதம்பரம், ஜவகர் ஆகிய 4 நபர்களுக்கும் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த அனைவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் காயம்பட்ட நான்கு நபர்களுக்கும் தலையில் தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட போத்தீஸ் ஹைப்பர் ஊழியர்களான சுகன், கௌதம், சுஜன், மதன், இளையராஜா, வெங்கடகிருஷ்ணன் என்ற கார்த்திக் ஆகிய 6 நபர்களையும் மாம்பலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில், போத்தீஸ் ஹைப்பர் விடுதியின் சமையல் ஊழியரான இளவரசன் என்பவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இளவரசன் மற்றும் அவரது நண்பர்கள் மது போதையில் சத்தமிட்டு வந்ததாகவும், இதனால் எதிர் தரப்பினர்கள் தூங்குவதற்கு தொந்தரவாக இருக்கிறது என கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.
நேற்று இரவு மீண்டும் இளவரசன், எதிர்தரப்பு நபர்களுக்கு போன் செய்து சண்டையை இன்று வைத்துக் கொள்ளலாம் வாருங்கள் எனக் கூறியதன் பேரில், விடுதிக்கு வந்த போத்தீஸ் துணிக்கடை ஊழியர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கும், சமையல் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே, பின் கைகலப்பாக மாறி, கையில் கிடந்த கட்டை மற்றும் பொருட்களால் மாறி மாறி தாக்கிக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து கைது போத்தீஸ் துணிக்கடை ஊழியர்களான 6 நபர்களையும் மாம்பலம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)