வயதான தம்பதிகளிடம் 10 லட்ச ரூபாய் எடுத்து மோசடி.. கல்லூரி மாணவி கைவரிசை..!
வயதான தம்பதியினரை கவனிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட கல்லூரி மாணவி, அவர்களிடம் இருந்து 10 லட்ச ரூபாயை எடுத்து மோசடி செய்துள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
![வயதான தம்பதிகளிடம் 10 லட்ச ரூபாய் எடுத்து மோசடி.. கல்லூரி மாணவி கைவரிசை..!](https://kumudamnews.com/uploads/images/202502/image_870x_67a5f688b4cd5.jpg)
சென்னை அசோக் நகர் 19 வது அவென்யூ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கலாவதி(74). இவர் காயிதே மில்லத் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் செந்தில் அமெரிக்காவில் வசித்து வருவதால் கலாவதி தனது கணவர் மணி (80) உடன் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கலாவதி தனது கணவர் மணியை கவனித்துக் கொள்வதற்காக, காயிதே மில்லத் கல்லூரியில் படித்து வரும் திருவள்ளுவர் மாவட்டத்ததை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை பணிக்கு அமர்த்தியுள்ளார்.
முதியவர் மணி எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவரது ஏடிஎம் கார்டை வீட்டில் பணிபுரிந்து வந்த 18 வயது இளம் பெண்ணிடம் கொடுத்து பணம் எடுத்து வரும்படி அனுப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் தந்தை இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மகன் செந்தில் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.
தந்தை ஈமச்சடங்கு முடிந்த பின்பு செந்தில் தனது தந்தையின் செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் இருந்த குறுஞ்செய்தி அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த செந்தில், வங்கிக்கு சென்று தந்தை கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பது குறித்த விவரங்களை சரி பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 10 லட்சம் வரை ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டதும், குறுஞ்செய்திகள் முழுவதும் மொபைலில் இருந்து அழிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து செந்தில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த கல்லூரி மாணவி 10 லட்ச ரூபாய் எடுத்து மோசடியில் ஈடுபட்டதை அறிந்துஅதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், செந்தில் இது குறித்து கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)