பறிமுதல் செய்த 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் - சுங்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!
இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சபீனா முகமது மொய்தீன் என்பவரின் கணவர் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சபீனா, அபுதாபி சென்றிருந்தார்.
ஊர் திரும்பிய அவரை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் கையில், 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்கள் அணிந்திருந்ததை சுட்டிக்காட்டி, இது விதிகளுக்கு முரணானது என கூறி அவற்றை பறிமுதல் செய்தனர்.
12 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அந்த வளையல்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சுங்கத்துறைக்கு அனுப்பிய மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதால், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று சபீனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, விதிகளின்படி குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தங்கத்தை கொண்டு வர முடியும் என்றும் அளவுக்கு அதிகமாக எடுத்து வரப்பட்ட இந்த தங்கத்திற்கு சுங்கவரியாக 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் சுங்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என்றும் பத்து செயின்கள் அணிந்து இருந்தாலோ, நகைகளை மறைத்து வைத்திருந்தாலோ சந்தேகம் கொள்ளலாம்; அவற்றை பறிமுதலும் செய்யலாம். மனுதாரர் தங்க வளையல்களை ரகசியமாக மறைத்து எடுத்து வராத நிலையில் அவற்றை பறிமுதல் செய்தது முறையற்றது எனக்கூறி, நகைகளை ஒப்படைக்க கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை ஏழு நாட்களில் பரிசீரித்து நகைகளை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
What's Your Reaction?