SIPCOT Workers Hostel : சிப்காட் தொழிலாளர்களுக்காக தங்கும் விடுதி... இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்!

Chief Minister Stalin Inaugurates SIPCOT Workers Hostel in Tamil Nadu : தமிழ்நாடு அரசு சார்பில் சிப்காட் தொழிலாளர்களுக்காக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 17) திறந்து வைக்கிறார்.

Aug 17, 2024 - 07:36
Aug 17, 2024 - 13:03
 0
SIPCOT Workers Hostel : சிப்காட் தொழிலாளர்களுக்காக தங்கும் விடுதி... இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்!
சிப்காட் தொழிலாளர்களுக்காக தங்கும் விடுதி

Chief Minister Stalin Inaugurates SIPCOT Workers Hostel in Tamil Nadu : தமிழ்நாடு அரசு சார்பில் 16 இடங்களில் சிப்காட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் சிப்காட் இயங்கி வருகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளை நம்பி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணி புரியும் தொழிலாளர்களுக்கு போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வந்தது. 

ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், வல்லம் மற்றும் ஓரகடம் ஆகிய சிப்காட் இயங்கி வரும் நிலையில், இவற்றில் கடந்த 30 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இங்குள்ள சிப்காட் வளாகத்தில் மென்பொருள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கண்ணாடி தொழிற்சாலைகள், பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மோட்டர் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என பல வகையான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 

இந்நிலையில், அங்கு வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் அவ்வப்போது எழுந்து வந்ததால், சிப்காட், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்துடன் இணைந்து சிறப்பு திட்டத்தை உருவாக்கியது. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு தற்போது மலிவு விலையில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி, வல்லம் - வடக்கல் பகுதியில் சுமார் 706 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 18, 720 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒரு தொகுதியில் 10 மாடிகளும், சுமார் 240 அறைகளும் உள்ளன. ஒரு அறையில் ஆறு படுக்கை வசதிகள் என 1440 நபர்கள் தங்குவதற்கான வசதிகளும் உள்ளன. 

மேலும் படிக்க: அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு மானியமாக ரூ. 37 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி ரூ. 498 கோடி கடனுதவியும் வழங்கியுள்ளன. இதில் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்காகவும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 17) திறந்து வைக்கிறார். இந்தியாவிலேயே தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகத் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow