Chief Minister Stalin Inaugurates Athikadavu Avinashi Project : அத்திக்கடவு - அவிநாசி திட்டம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக இருந்து வந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட நிலையில், தற்போது ரூ. 1,916 கோடியே 41 லட்சம் செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கான தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்..
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலமாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்பப்படும். அதனால் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மேலும் இத்திட்டத்தினால் 3 மாவட்டங்களில் உள்ள 24,468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் எனவும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அத்திக்கடவு- அவினாசி திட்டம் இன்று தொடங்க உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, “ ஈரோடு மாவட்டம் பவானி நீரேற்று நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 17) அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் 1,045 குளங்களுக்கும் தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்துள்ளோம். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நீதிமன்ற உத்தரவின்படி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்துக்கான பம்பிங் ஸ்டேஷன் ஒன்று முதல் மூன்று வரை கடந்த அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சி வந்த பின்புதான் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பணி நிறைவேற்றப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கிய மருத்துவர்கள்
இத்திட்டத்திற்காக 1957ம் ஆண்டு முதன் முதலில் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் 1972ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கொள்கை ரீதியாக இத்திட்டம் ஏற்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் கிடப்பில் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.