Nationwide Doctors Strike For Kolkata Medical Student Murder : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பவம் தொடர்பாக CBI விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொல்லப்பட்ட தனது மகளுடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்களது பெயர்களுடன் மாணவியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே வேளையில் சம்பவம் நடந்த மருத்துவமனை, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. அதில், இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள இந்திய மருத்துவ சங்கம் இன்று (ஆகஸ்ட் 17) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளது. இதில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் செய்யப்போவதில்லை எனவும் அதேநேரம் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல இயங்கும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் நாளை (ஆகஸ்ட் 18) காலை 6 மணி வரை நடைபெறும் என மருத்துவர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக போராட்டம் நடைபெற்று வரும் 5 நாட்களாக மருத்துவர்கள் பணி செய்யாததால் சிறுவன், கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். இதனால், தயவுசெய்து போராட்டத்தை கைவிடுங்கள் எனவும், அதற்காக உங்கள் கால்களில் கூட விழ நான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சிபிஐக்கு அனைத்து ஆதரவையும் வழங்கி வருவதாகவும், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதில் தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மேற்குவங்கம், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் நடைபெறும் போராட்டத்தில் பெங்காலி திரைப்படத்துறை, சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.