செயலில் ஒன்றுமில்லை.. விளம்பரம் தான் அதிகமா இருக்கு.. தமிழிசை சவுந்தரராஜன்
மழைக்கால தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயலை விட விளம்பரம் தான் அதிகமாக உள்ளது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது தமிழக அரசு. மேலும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளதாகவும், அரக்கோணம் கப்பல் படை வீரர்கள், மத்திய கடலோர காவல் படையினரும் படகுகளுடன் தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மீட்பு பணியின் ஒரு பகுதியாக, நிவாரண மையங்கள், உணவுக் கூடங்கள் ஆகியை அமைக்கப்பட்டு. மக்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கும் பணியையும் கையாண்டது அரசு. தற்போது எத்தனை பேருக்கு உணவு வழங்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவமழை காலங்களில் தொலைநோக்கு திட்டங்கள்தான் மக்களுக்கு இருக்க வேண்டுமே தவிர, அதுவே மக்களுக்கு தொல்லை தரக்கூடிய திட்டங்களாக இருக்கக்கூடாது என்றும் பருவமழை காலத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதை காட்டிலும் வெள்ள அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் மழைக்கால மருத்துவ முகாமினை முன்னாள் ஆளுநரும், முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து குமுதம் செய்திகளுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பருவமழை காலங்களில் தொலைநோக்கு திட்டங்கள் மக்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் அதுவே மக்களுக்கு தொல்லை தரக்கூடிய திட்டங்களாக அமைந்து விடக்கூடாது.
பருவமழையில் சென்னை பாதுகாக்கப்பட்டுள்ளதாக திருப்புகழ் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த திருப்புகழ் கமிட்டி இது குறித்தான திட்டங்கள் எந்த அளவுக்கு பரிசீலிக்கப்பட்டு தீட்டப்பட்டுள்ளது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதே நேரத்தில் கனமழை பெய்யும் நேரங்களில் மட்டுமே மழைநீர் வடிவதை காட்டிலும் எப்பொழுதுமே மழைநீர் வடிவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பருவமழை காலத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதை காட்டிலும், வெள்ள அறிக்கை வெளியிட வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் மேம்பாலங்களில் கார்களின் நிறுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே கார்களை நிறுத்துவதற்கான நம்பிக்கையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.
சாலைகளை மேம்பாலங்களில் கார்களின் நிறுத்த அனுமதி வழங்கி விட்டு அதற்கு நாங்கள் அபராதம் விதிக்கப்படவில்லை என்று அரசு கூறுவது சரியல்ல. மழைக்கால தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயலை விட விளம்பரம் அதிகமாக உள்ளது.
திமுகவை தவிர மற்ற கட்சிகள் யாருமே மழைக்கால தடுப்பு பணிகளில் வேலை செய்யவில்லை என்று கூறும் திமுகவினருக்கு, விளம்பரத்திற்காக சன் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட மற்ற தொலைக்காட்சிகள் உள்ளது. நேரடியாக களத்தில் பணி புரியும் எங்களை நேரலையில் காண்பிக்க ஆள் இல்லை” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?