30 எம்.எல்.ஏ... 300 ஸ்வீட் பாக்ஸ்..! செங்கோட்டையன் வசமாகும் அதிமுக..? Deadline விதித்த டெல்லி..?
எடப்பாடியார் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கிவிட்ட செங்கோட்டையன், கட்சியைப் பிளவுப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் எம்.ஜி.ஆர் மாளிகையை ஆட்டம் காண வைத்துள்ளது. அப்படி செங்கோட்டையன் போட்டுள்ள பிளான் என்ன? அதிமுகவிற்கு கிளைமாக்ஸை எழுதுகிறார் செங்கோட்டையன்? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

தன் மகன் திருமணத்தை வைத்து கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டத்தில் தனி அரசியல் செய்துகொண்டிருக்கிறார் வேலுமணி என்கிறனர் ரத்தததின் ரத்தங்கள். கோவையின் தி.மு.க. வி.ஐ.பிக்களுக்கு தன் அண்ணன் அன்பரசனை அனுப்பி பத்திரிகை வைத்து அழைப்பு விடுக்கும் அளவுக்கு லாபி செய்வதாகவும், ’நல்லறம் அறக்கட்டளை' மூலம் சமீபத்தில் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பல கோடி மதிப்பில் நடந்த விழாவுக்கு கோவை முழுக்க வேலுமணிக்கு நிகராக அன்பரசனின் போட்டோக்களும் போடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்ணனை கோவையில் வேலுமணி முன்னிறுத்துவதில் பெரும் அரசியல் கணக்குகள் இருப்பதாக செங்கோட்டையன் நினைப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் தலைமையை கையிலெடுத்தோ அல்லது தன் தலைமையில் தனி அணி அமைத்தோ, அரசியல் செய்கையில், கோவை அ.தி.மு.க.வின் முகமாக அன்பரசனை கொண்டு வருவதுதான் வேலுமணி பிளான் என செங்கோட்டையன் யூகித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் பேசியதை அடுத்து, அதி.மு.க. எம்.எல்.ஏக்கள் சுமார் 30 பேர் செங்கோட்டையனை தொடர்புகொண்டதாகவும், அதில் சிலர் கட்சியில் பிளவை ஏற்படுத்த வேண்டாம்... ஓ.பன்னீர்செல்வம் நிலைதான் உங்களுக்கும் ஏற்படும் என்று செங்கோட்டையனிடம் சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அதே சமயம் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், 'கட்சியை மீட்டெடுக்க இதுவே சரியான தருணம். நீங்கள் மனதில் பட்டதை தைரியமாக பேசுங்கள், நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம்' என்று செங்கோட்டையனுக்கு சிலர் தைரியம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, பல மாநில, மாவட்ட நிர்வாகிகளும் செங்கோட்டையனை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் அஜெண்டா என்றும், இதற்கான அசைன்மென்ட்டை எஸ்.பி. வேலுமணியிடம் டெல்லி பா.ஜ.க. கொடுத்ததாகவும், ஒருகட்டத்திற்கு மேல் வேலுமணியால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதால், வேலுமணியை இனியும் நம்புவது வீண் என்றே செங்கோட்டையனை டெல்லி மேலிடம் கையில் எடுத்துள்ளதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்களில் இருந்து ஹாட்டாக சில தகவல்கள் லீக்காகி வருகின்றன.
இந்தநிலையில்தான், உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடை இல்லை என நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், இரட்டை இலை சின்னம், கட்சி பெயர், கொடி ஆகியவற்றிற்கு தடை வரவும் வாய்ப்புள்ளது. இதனால் எடப்பாடியின் பொதுச்செயலாளர் பதவி, தமிழ்மகன் உசேனின் அவைத்தலைவர் பதவி என அனைத்துமே கேள்விக்குறி ஆகியிருக்கின்றன.
செங்கோட்டையனின் எதிர்ப்பு மூலம் எடப்பாடிக்கு எதிராக ஓர் அணி உருவாகவும் வாய்ப்பு உள்ளதாகவும், அந்த அணியுடன் பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி ஆகியோரும் இணையலாம் என்றும், செங்கோட்டையன் தலைமையில் புதிய அணியை உருவாக்கி, அவர்கள் பொதுக்குழுவைக் கூட்டி எடப்பாடியை நீக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் உட்கட்சி விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதோடு, இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதை ஒருவேளை ஏற்றுக் கொள்ளப்பட்டால் செங்கோட்டையன் அணிக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் வழங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, செங்கோட்டையன் அணிக்கு பெரும்பாலான நிர்வாகிகளை கொண்டுவரும் வேலையை சைலன்டாக சசிகலா, பன்னீர்செல்வம் தரப்பு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற சுமார் 300 பெரிய ஸ்வீட் பாக்ஸ் வரை சசி அண்ட் கோ தரப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. உருவாக எடப்பாடிக்கு கடைசி வாய்ப்பை டெல்லி கொடுத்துள்ளதாகவும், வரும் பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அனைவரும் ஒருங்கிணைந்து அவரது நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி, ஒருங்கிணைந்துவிட்டதாக அறிவியுங்கள் என்பதே டெல்லியின் நிபந்தனையாக இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி இதை செய்யாதபட்சத்தில், செங்கோட்டையனை வைத்து முன்னர் சொன்ன விஷயங்களை நாங்கள் செய்து முடிப்போம் என்று எடப்பாடியாருக்கு டெல்லி டெட் லைனை கொடுத்துள்ளதாகக் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
செங்கோட்டையனிடம் இதுபற்றி பேசியபோது, "எனக்கு வேறெந்த உள்நோக்கமுமில்லை. அத்திக்கடவு அவிநாசி திட்ட நிறைவேற்ற பாராட்டு விழாவில் தலைவர் மற்றும் அம்மாவின் படங்கள் இல்லாததால் அந்நிகழ்வில் நான் பங்கேற்கவில்லை. வேறு ஏதாவது விஷயமென்றால் நானே இரண்டொரு நாட்களில் அழைக்கிறேன்" என்றார்.
இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் கேட்டோம். "வழக்கு தொடுத்த ஆறு பேரும் அதிமுக அடிப்படை உறுப்பினராகக்கூட சம்பந்தப்படாதவர்கள். அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது. அதேபோல உட்கட்சி விவகாரங்களில் யார் நீதிமன்றத்தை நாடுகிறார்களோ அவர்களின் அடிப்படை உறுப்பினர் உரிமை நீதிமன்றத்தை நாடிய உடனேயே இல்லாமல் போய்விடுகிறது. இந்த வழக்கை பொறுத்தவரையில், எந்த அமர்வு தடை விதித்ததோ, அதே அமர்வு இன்று தடையை விலக்கியிருக்கிறது.
தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது. தேர்தல் ஆணையம், ஒரு இயக்கத்தை பற்றியோ, கட்சியை பற்றியோ விசாரணை நடத்தும்போது, அந்த இயக்கத்தினுடைய சட்டதிட்ட விதிகளையும் கருத்தில் கொண்டுதான் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். தவிர, 'தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது, அதற்கு உரிமையில்லை' என நாங்கள் சொல்லவில்லை. முழுமையான உத்தரவு கிடைக்கப் பெற்றதும், அதில் சொல்லப்பட்டிருக்கும் சாராம்சங்களை கருத்தில் கொண்டு, பொதுச்செயலாளரின் ஆலோசனைப்படி எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்" என்றார்.
தீர்ப்பைக் கேட்டு உச்சிக் குளிர்ந்து போயிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 17ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறாரா. இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நகர்வு குறித்து தன் ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.
What's Your Reaction?






