Lipstick Issue in Ripon Building at Chennai : சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக எஸ்.பி.மாதவி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெண் டபேதாராக பணிபுரிந்து வந்த மாதவிக்கு மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர் மெமோ அளித்துள்ளார். மாதவி பணிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை என இதற்கு காரணமாக கூறப்பட்டது.
தொடர்ந்து பணிக்கு காலதாமதமாக வருவதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாதவி தான் வேலைக்கு தாமதமாக வந்ததற்கான ஆதாரத்தை காட்டுமாறு தெரிவித்துள்ளார். உடனே ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி பணிக்கு 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்ததை ஆதாரமாக காட்டி உள்ளனர்.
ஆனால் பணிக்கு வரும்போது அதிக லிப்ஸ்டிக் பூசி வரக்கூடாது என்று அவருடைய உயர் அதிகாரி எச்சரித்ததாக தெரிகிறது. மேலும், அலுவலகத்திற்கு வரும் மற்ற துறைகளை சார்ந்தவர்களுடன் மாதவி பேசவோ அல்லது சந்திக்கவோ கூடாது என அவர்கள் தெரிவித்ததாகவும், அதற்கும் அப்படி எதும் அரசாணை உள்ளதா என மாதவி கேள்வி கேட்டதால் டபேதார் மாதவி மணலி மண்டலத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், டபேதார் மாதவி லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாறுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய உமா ஆனந்தன், “டபேதார் மாதவிக்கு ஆதரவாக, அடுத்த முறை நானும் பளிச்சென்று லிப்ஸ்டிக் போட்டு மாநகராட்சி கூட்டத்திற்கு செல்ல இருக்கிறேன். லிப்ஸ்டிக் போடுவதும், போடாததும் ஒரு பெண்ணின் உரிமை. அது குறித்து கேள்வி எழுப்பிய மாதவி, பணியிட மாறுதல் செய்யப்பட்டு இருப்பது தவறானது.
லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று அரசாணை ஏதேனும் உள்ளதா என மாதவி கேட்டுள்ளார். அவரது கேள்வி நியாயமானது தான். சம உரிமை பேசுகிற திமுக, இந்த விவகாரத்தில் தனிமனித உரிமையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது.
மாநகராட்சி ஊழியர் வயதானவர் அவர் லிப்ஸ்டிக் போடுவதை கேள்வி கேட்கும் திமுகவினர் ஸ்டாலின் வயதானவர் என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருப்பதும், முதலமைச்சர் மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என திமுக கருதுவது மட்டும் எப்படி நியாயமானதாக இருக்க முடியும்” என்றும் கேள்வி எழுப்பினர்.