அரசியல்

மூன்றாக பிரிந்த விழுப்புரம்..! அப்செட்டில் பொன்முடி...? ராஜினாமா முடிவால் பதற்றம்...!

திமுகவில் திடீரென நிகழ்ந்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தால் கடும் அப்செட்டில் உள்ளதாகக் கூறப்படும் அமைச்சர் பொன்முடி எடுத்துள்ள முடிவு மாண்புமிகுகளை பதறவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பொன்முடி எடுத்த முடிவு என்ன?விரிவாக பார்ப்போம்.

மூன்றாக பிரிந்த விழுப்புரம்..! அப்செட்டில் பொன்முடி...? ராஜினாமா முடிவால் பதற்றம்...!
மூன்றாக பிரிந்த விழுப்புரம்..! அப்செட்டில் பொன்முடி...? ராஜினாமா முடிவால் பதற்றம்...!

200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை உறுதி செய்யும் வகையில் களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, கட்சியின் கட்டமைப்பிலும் சில மாற்றங்கள் மேற்கொண்டு வருகிறது திமுக. அதன்படி முதற்கட்டமாக, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சி ரீதியாக பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளது திமுக தலைமை. 

இந்த நிலையில், இரண்டாக இருந்த விழுப்புரம் மாவட்ட திமுகவை மூன்றாக பிரித்ததோடு, அந்த மூன்றாவது மாவட்டத்தின் செயலாளராக அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த லட்சுமணனுக்கு வழங்கி ஷாக்காக்கியுள்ளது திமுக தலைமை. 

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிந்திருந்தது திமுக. அப்போது வடக்கு மாவட்டச் செயலாளராக பொன்முடி நியமிக்கப்பட்ட நிலையில், தெற்கு மாவட்டச் செயலாளராக அங்கயற்கன்னியும் நியமிக்கப்பட்டார். ஒருகட்டத்தில் பொன்முடி சீனியரானதால், அவர் தலைமைக் கழகத்திற்கு மாற்றப்பட்டார். கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்திற்கு சுமார் 12 ஆண்டுகள் செயலாளராக இருந்த பொன்முடி, திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனால், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக மஸ்தானும், தெற்கு மாவட்டச் செயலாளராக புகழேந்தியும் நியமிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் மஸ்தானிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதோடு அவருக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி வழங்கி ஆஃப் செய்தது தலைமை. மறுபக்கம், உடல்நலக்குறைவால் புகழேந்தியும் காலமானார். மஸ்தானுக்கு பதில் டாக்டர் சேகர் வடக்கு மாவட்ட செயலாளராகவும், புகழேந்திக்கு பதிலாக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியும் நியமிக்கப்பட்டனர்.    

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தை தொடங்கியுள்ள திமுக, விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, புதிதாக மத்திய மாவட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மஸ்தானை மீண்டும் மாவட்டச் செயலாளராக்கியுள்ள தலைமை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய மாவட்டத்திற்கு அதிமுக வரவான லட்சுமணனை பொறுப்பாளராக்கியுள்ளது. 

தற்போது விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை, வடக்குக்கு மஸ்தானும், தெற்குக்கு கௌதம சிகாமணியும், மத்திய மாவட்டத்துக்கு லட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளுக்கு மஸ்தானும், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் தொகுதிகளுக்கு ம், கௌதம சிகாமணியும், விழுப்புரம், வானூர் தொகுதிகளுக்கு லட்சுமணனும் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த புகழேந்தியின் மறைவிற்கு பிறகு கட்சிக்குள் வன்னியருக்கான முக்கியத்துவம் குறைந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், அதனை சரிசெய்யவே புதிதாக ஒரு மாவட்டத்தைப் உருவாக்கி, அதற்கு வன்னியரான லட்சுமணனை பொறுப்பாளராக்கி ஸ்மார்ட் மூவ்வை வைத்துள்ளது திமுக என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

லட்சுமணனை பொறுத்தவரை, கடந்த 2015 ஆம் ஆண்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர். அப்போது, விழுப்புரம் - சென்னை புறவழிச்சாலையோரம் சொந்தமாக சுமார் 5 சென்ட் நிலத்தை வாங்கி அங்கு 104 அடி உயர கொடி கம்பத்தை நட்டு, அதில் ஜெயலலிதா பிறந்தநாளுக்காக அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை அழைத்து வந்து கொடியேற்ற வைத்தார் லட்சுமணன். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு அதிமுகவில் அமைப்புச் செயலாளராகவும் மாநிலங்களவை எம்பி-யாகவும் இருந்த லட்சுமணன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார். அவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பம் இன்றும் லட்சுமணன் வசம் தான் உள்ளது. தற்போது தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமணன், உதயநிதியை அழைத்து வந்து அந்தக் கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்ற திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  

இந்த நிலையில்தான், லட்சுமணன் கைகளுக்கு விழுப்புரம் போனதால் அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான பொன்முடி ஏகத்துக்கும் அப்செட்டில் இருப்பதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். அண்மையில் புதிய மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தலைமையை சந்தித்து நன்றி தெரிவிக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது மாவட்ட அமைச்சர் என்கிற மரியாதைக்காக பொன்முடியை அவரது சென்னை வீட்டில் சந்திக்க சென்றிருக்கிறார் லட்சுமணன். நீண்ட நேரம் அவரை கக்க வைத்த பொன்முடி, சரியாகவே முகம் கொடுத்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. 

பொன்முடியின் இந்த அப்செட்டிற்கு காரணம், லட்சுமணனுக்கு விழுப்புரம் சென்றது தான் என்கின்றனர் மாவட்ட திமுகவினர். ‘விக்கிரவாண்டி அல்லது வானூர் தொகுதியை லட்சுமணன் கேட்டு வாங்கி இருக்கலாம்... ஆனால் விழுப்புரத்தை கேட்டது ஏன்?’ என்பதுதான் பொன்முடியின் ஆதங்கமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து ஆதரவாளர்கள் ஆயிரம் பேரை சென்னைக்கு வரவழைத்த பொன்முடி தரப்பினர், அறிவாலயத்தில் தலைமையை சந்தித்து மீண்டும் விழுப்புரத்தைக் கேட்டதாக அறிவாலய பட்சி கூறுகின்றது. ஆனால், தலைமை பதில் ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்செட் ஆன பொன்முடி, எதுவும் பேசாமல் வெளியேறிதோடு, தனது துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் மூடுக்கும் வந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பொன்முடியின் இந்த முடிவை அறிந்தக் கொண்ட தலைமை, பதறிப்போய் ஜெகத்ரட்சகன் மற்றும் எ.வ.வேலு ஆகியோரை அனுப்பி பொன்முடியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் அதிருப்தியில் இருந்து வெளியே வர முடியவில்லை என்பதால், கொஞ்ச நாட்கள் ஆறப்போட பொன்முடி முடிவெத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.