RS Bharathi : மணிப்பூர், குஜராத்தை விட தமிழகத்தில் குற்றங்கள் பெரிதாக நடக்கவில்லை.. சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி
RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
RS Bharathi : நெல்லையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக முதலமைச்சர் சிகிச்சைக்காக அமெரிக்க சென்றுள்ளார் என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, "சிகாகோவில் முதலமைச்சர் சைக்கிள் ஓட்டுகிறார். அதேபோல் அமெரிக்காவில் தினமும் நடக்கும் முதல்வரின் நிகழ்வுகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. வெளிநாட்டு ஊடகங்களை விலைக்கு வாங்க முடியுமா என கேட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிசாமிக்கு கண் குருடு என தெரிகிறது. நெருக்கடியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் குறித்து இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தன்னுடன் இருந்தவர்கள், விட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற பதட்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி வருகிறார். தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அமெரிக்கா சென்று முதல்வர் திரும்பியவுடன் ஊடகங்களை சந்தித்து முதலீடுகள் தொடர்பாக பேசுவார். எதனையும் மூடி மறைக்கும் பழக்கம் திமுகவுக்கு கிடையாது" எனக் கூறினார்.
திமுகவில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கேட்கப்பட்டப்போது, “திமுக மீது வைக்கப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகள் வழக்கமாக சொல்லும் ஒன்றுதான். மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட தமிழகத்தில் பெரிதாக ஒன்று நடக்கவில்லை. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உனக்கு சிறப்பாக உள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது” என்றார்.
விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக கஜானாவை காலி செய்ததாக எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்து கேட்டபோது, “அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின், ஆசியாவே தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் முதல் முறையாக விளையாட்டு போட்டி நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர்களது ஆட்சியில் இதுபோன்று நடத்த முடியவில்லை என்ற வயிற்றெரிச்சலில் அவ்வாறு பேசுகிறார்" என்றார்
What's Your Reaction?