மெயிலில் பறந்த ராஜினாமா கடிதம்..? மனம் இறங்காத மாஜி? பதறிப்போன சீனியர்கள்..!

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அதிமுக தலைமையை நெருக்கடியில் தள்ளி இருக்கும் நிலையில், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் செங்கோட்டையன் ராஜினாமா கடித்ததை அனுப்பி எடப்பாடியாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையனை சமாளிக்க எடப்பாடியார் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

Feb 15, 2025 - 15:24
 0
மெயிலில் பறந்த ராஜினாமா கடிதம்..? மனம் இறங்காத மாஜி? பதறிப்போன சீனியர்கள்..!
மெயிலில் பறந்த ராஜினாமா கடிதம்..? மனம் இறங்காத மாஜி? பதறிப்போன சீனியர்கள்..!

அதி.மு.க. பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி நெருக்கடியில் அமர்ந்திருக்க, ஓ.பன்னீர் செல்வமோ உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார். இன்னொரு பக்கம் கட்சியின் சூப்பர் சீனியரான செங்கோட்டையன், எடப்பாடிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியுள்ளார். 

கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட செங்கோட்டையன், மூன்று நாட்கள் புதுச்சேரியில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தன் ஆதரவாளர்களை வரவழைத்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியாக தகவல்கள் கசிந்துள்ளன. அந்த பேச்சுவார்த்தையில், “நான் கட்சிக்குள் ஏதாவது ஒரு முடிவை எடுத்தால், அதற்கு ஆதரவாக நிற்க வேண்டும் நிற்பீர்களா?” என்று செங்கோட்டையன் கேட்டதாகவும், அதற்கு அவரின் ஆதரவாளர்களும் தலையாட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் இன்று எடுத்திருக்கும் முடிவு ஒரு மாதத்துக்கு முன்பே எடுக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 
 

இதுபற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவரிடம் பேசினோம், ”எடப்பாடி பழனிசாமியை அரசியலுக்கு கொண்டுவந்தவரே செங்கோட்டையன் தான். எம்.ஜி.ஆர் காலத்திலேயே மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ என பல பதவிகளை வகித்தவர். ஒரு காலகட்டம் வரை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் இருந்தவர். அப்படிப்பட்டவரை ஒருகட்டத்தில் ஜெயலலிதா ஒதுக்கி வைத்தாலும், சசிகலா குடும்பம் செங்கோட்டையனை கைவிடவில்லை. எடப்பாடி வசம் அதி.மு.க வந்த பிறகு, செங்கோட்டையன் மட்டம் தட்டியே வைக்கப்பட்டதாக பேசப்பட்டது.  

ஆனால், சமீப காலமாக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், தனது உறவுக்காரருமான கருப்பணனின் பேச்சைக் கேட்டு செங்கோட்டையனை அவரது சொந்த மாவட்டத்திலேயே எடப்பாடி ஓரம்கட்டியதாக கூறப்படுகிறது. தன் முன் நிற்கவே பயப்படும் நபர்களுக்கு கட்சியில் பெரிய பதவிகள் கொடுக்கப்பட்டதை செங்கோட்டையனால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் உள்ளுக்குள் உறுமியபடி இருந்தவர், சரியான தருணத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் எடப்பாடிக்கான பாராட்டு விழாவை காரணம் காட்டி பொங்கிவிட்டார்” என்கின்றனர். 

'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் விழா விளம்பரங்களில் இல்லை, அதனால் அந்நிகழ்வுக்குப் போகவில்லை' என செங்கோட்டையன் அளித்த விளக்கம் அ.தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே தனது மாவட்டச் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்து, கடிதத்தை மெயிலில் அனுப்பியதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்களில் இருந்து தகவல் லீக்காகியுள்ளது. 

இப்படி செங்கோட்டையனின் அடுத்தடுத்த பாய்ச்சல்கள் எடப்பாடிக்கு கிலியைக் கொடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஜெயக்குமார் உள்ளிட்ட சில சீனியர்களை செங்கோட்டையனிடம் பேச எடப்பாடி தூது அனுப்பியதாகக் கூறப்படுகிறது. 'விடுங்க பார்த்துக்கலாம்ண்ணே' என்று ஜெயக்குமார் டீம் சொன்ன எந்த சமாதானத்தையும் செங்கோட்டையன் ஏற்கவில்லை என்றும், மாறாக செங்கோட்டையன் வைத்த நிபந்தனைகள் எடப்பாடி தரப்பை அதிரவைத்திருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது. 

'என்னைவிட ஜூனியர்களுக்கு எவ்வளவோ உச்ச பதவிகளை அள்ளிக் கொடுத்துள்ளார் பொதுச்செயலாளர். என்னை புறக்கணிக்க என்ன காரணம்? எடப்பாடி பழனிசாமியே முதல்வர், கழக தலைமையாளர்னு சசிகலா சொன்னபோது பிரச்னை பண்ணாமல் விட்டுக் கொடுத்தேன். அதற்கு கைமாறாக எனக்கு கட்சியில் அவைத்தலைவர் பதவி கூட தரப்படவில்லை, சட்டமன்றத்தில் கழக கொறடா பதவியும் தரப்படவில்லை? இதையெல்லாம் தாண்டி என் மாவட்டத்தில் என்னை அசிங்கப்படுத்தியது ஏன்? இனி எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். அடிமட்ட தொண்டனாக இருந்துவிட்டுப் போகிறேன்' என்று செங்கோட்டையன் அழுத்தமாக பேசியதாகவும், இதைக் கேட்டு எடப்பாடியார் அதிர்ந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், செங்கோட்டையனின் ராஜினாமாவை தலைமை ஏற்கவுமில்லை, அதே நேரத்தில் அவரை சமாதானம் செய்யவும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு, கொறடா உள்ளிட்ட கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் எதிர்பார்க்கிறார் செங்கோட்டையன் என்று சொல்லப்பட்ட நிலையில், தனக்கு உச்ச பதவி வேண்டுமென்பது அவரது கோரிக்கையல்ல. ஆனால், பல பதவிகளை கையில் வைத்துக் கொண்டு ஜபர்தஸ்து பண்ணும் சிலரை அடக்கி வைக்க வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow