"ஜெயலலிதாவே போய் சேந்துருச்சு..! அப்புறம் என்ன அம்மா உணவகம்...?" சர்ச்சையை கிளப்பிய RS பாரதி!

RS Bharathi Criticized Amma Unavagam Issue : அம்மா உணவகத்தில் தயாராகும் சப்பாத்தியை வட மாநிலத்தவரே சாப்பிடுவதாகவும், அவர்களுக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தில் அம்மா உணவகத்தில் சாப்பாடு போடப்படுவதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Sep 22, 2024 - 15:52
Sep 22, 2024 - 17:12
 0
"ஜெயலலிதாவே போய் சேந்துருச்சு..! அப்புறம் என்ன அம்மா உணவகம்...?" சர்ச்சையை கிளப்பிய RS பாரதி!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி

RS Bharathi Criticized Amma Unavagam Issue : ஆலந்தூர் அம்மா உணவகம் அரசுப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் சென்னை ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகம், அரசுப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சையானது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பங்கேற்கும் வகையில், பொது உறுப்பினர்கள் கூட்டம் என்ற ஆலோசனைக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. உட்கட்சி பிரச்சினைகள், உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் சந்திப்பு உள்ளிட்டவை குறித்து பேசும் வகையில் இக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. 

இதன் ஒருபகுதியாக சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற சென்னை வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய ஆர்.எஸ் பாரதி, ஆலந்தூர் அம்மா உணவகம் அரசுப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியதை விமர்சித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவே போய் சேந்துருச்சு, அப்புறம் என்ன அம்மா உணவகம்..? ஆவேசமாக பேசினார். 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்ட எடப்பாடி கும்பல், ஏதோ 150 பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அம்மா உணவகத்தை எல்லாம் திமுக மூடிவிட்டது என்பது போல பேசி வருகின்றனர். ஜெயலலிதா அரசு வீணாய்போன உணவை அம்மா உணவகத்தில் பரிமாறியது என்று குற்றம்சாட்டியதுடன், அம்மா உணவகத்தில் இரவில் பரிமாறப்படும் சப்பாத்தி, குருமாவை இங்கிருக்கும் பீகார், உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலத்தவர்கள் தான் மொத்தமாக சாப்பிடுகின்றனர். நம்ம வரிப்பணத்தை செலவு செய்து அவனுக்கு சாப்பாடு போடுகிறோம் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியுள்ளார். 

மேலும் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, மகாத்மா காந்தியின் ஆட்சி என்று பெருமித்ததுடன் கூறிய அவர், திமுக தொண்டர்கள், வட்டச் செயலாளர்கள் மீது குறை இருந்தால் பகுதிச் செயலாளரிடம் கூறுங்கள். பகுதிச் செயலாளர் மீது குறை இருந்தால், மாவட்ட செயலாளரிடம் புகார் கூறுங்கள். மா.செ மீதோ சட்டமன்ற உறுப்பினர்கள் மீதோ குறை இருந்தால், நேரடியாக தலைமைக் கழகத்திற்கு வந்து என்னிடம் புகார் தெரிவியுங்கள். எந்த நேரத்தில், யார் வந்து புகார் சொன்னாலும் கேட்பதற்கு நான் தயாராக உள்ளேன். அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க திமுக தலைமை தயங்காது என்றும் நிர்வகிகளை எச்சரித்தார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, திமுக பவள விழாவை கொண்டாடுகிறது, 75 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. திமுகவுக்கு இது மிகப்பெரிய நிகழ்ச்சி, எனவே தான் 2019ம் ஆண்டிலிருந்து எங்களுடன் பயணிக்கக்கூடிய கூட்டணி கட்சிகளை அழைத்து பவள விழாவை நடத்துகிறோம் எங்கள் கூட்டணியில் எந்த கட்சியும் விலகவில்லை புதிதாக கமல்ஹாசன் வந்துள்ளார். ஓ.பி.எஸ். எப்படியாவது 2 அணியையும் சேர்க்க வேண்டும் என்று நினைத்து வலை வீசிப் பார்க்கிறார். அதற்காகவே வேலுமணி, வைத்திலிங்கம் மீது திமுக ஆட்சியில் பொய் வழக்குப் பதிவு செய்யப்படுவதாக கூறுகிறார் என்றார். மேலும், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு, திருப்பதி லட்டை நீங்களே சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, அதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow