'பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை'.. திடீரென பாச மழை பொழிந்த ராகுல் காந்தி!
''அரசியல் வேடிக்கையான ஒன்று. அரசியலில் நீங்கள் ஒருவரை தாக்கி பேசுவீர்கள். அவர் உங்களை தாக்கி பேசுவார். மறுபடியும் நீங்கள் அவரை பேச, அவர் உங்களை பேச என இது போரடிக்கிறது'' என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
வாஷிங்டன்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் சென்றடைந்த அவருக்கு இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன்பிறகு இந்திய வம்சாவளியினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசி வருகிறார். நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி, டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து உரையாற்றினார்.
அப்போது ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடி மற்றும் பாஜகவை ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசி இருந்தார். ''நாடாளுன்ற தேர்தல் முடிவு பாஜகவுக்கு பாடத்தை புகட்டியுள்ளது. தேர்தல் முடிவு வெளியான அடுத்த நொடியே பாஜக மற்றும் பிரதமர் மோடி மீதான மக்களின் பயம் போய்விட்டது. இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதலை மக்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்'' என்றார். அத்துடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு மக்களை இனம், மொழி, மதம் வாரியாக பிரித்தாள நினைக்கிறது என்றும் பகீரங்கமாக குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தியின் பேச்சைத் தொடர்ந்து பாஜகவினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ''ராகுல் காந்தி வெளிநாட்டில் நமது இந்தியா, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை அவமானப்படுத்துவது இது முதன்முறை அல்ல. இதை அவர் எப்போதும் செய்து வருகிறார். ராகுல் காந்திக்கு கொஞ்சம் கூட முதிர்ச்சியுடன் செயல்படவில்லை'' என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்பட பல்வேறு பாஜகவினர் ராகுல் காந்தி மீது பாய்ந்தனர்.
நிலைமை இப்படி இருக்க, 'பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை' என்று தற்போது ராகுல் காந்தி பேசி இருப்பது பாஜகவினரை திருப்பி பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, ''அரசியல் வேடிக்கையான ஒன்று. அரசியலில் நீங்கள் ஒருவரை தாக்கி பேசுவீர்கள். அவர்கள் உங்களை தாக்கி பேசுவார்கள். மறுபடியும் நீங்கள் அவரை பேச, அவர் உங்களை பேச என இது போரடிக்கிறது.
நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உண்மையைச் சொன்னால் நான் பிரதமர் மோடியை வெறுக்கவில்லை. மோடியின் பார்வை வேறு; என்னுடைய பார்வை வேறு. நான் மோடியின் பார்வையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நான் அவரை வெறுக்கவில்லை. அவர் எனக்கு எதிரி கிடையாது. பல தருணங்களில் மோடி செய்வதை பார்க்கும்போது அவர் மீது எனக்கு அனுதாபமும், இரக்கமும் வருகிறது'' என்று ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?