பயங்கர நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த கேதார்நாத் யாத்திரை பக்தர்கள்.. 3 பேர் பலியான சோகம்!
நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இமயமலையில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புகழ்பெற்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
மிகவும் கடினமான கரடுமுரடான பாதையில், கடினமான வானிலைக்கு மத்தியில் யாத்திரை செல்வது பக்தர்களுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான கேதார்நாத் யாத்திரை கடந்த மே மாதம் 10ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், உத்தராகண்ட்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில்தான் உத்தராகண்ட்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிர்பாசா என்ற பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த கிஷோர் அருண் பரேட் (31), ஜல்னாவை சேர்ந்த சுனில் மகாதேவ் காலே (24) மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கை சேர்ந்த அனுராக் பிஷ்ட் (22) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். நிலச்சரிவில் சிக்கி 8 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்டது கேதார்நாத் யாத்திரை செல்லும் முக்கிய பாதையாகும். குரிஹன்ட் என்ற பகுதியில் இருந்து கேதார்நாத் கோயிலுக்கு நடந்து சென்றபோது பக்தர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இந்த விபத்து காரணமாக கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் பலியானவர்களின் குடும்பத்துக்கு உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''நிலச்சரிவு ஏற்பட்ட தகவல் அறிந்தவுடன் சம்பவ இடங்களுக்கு உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்தேன். அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன'' என்று கூறியுள்ளார்.
கேதார்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது உத்தராகண்ட் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






