Wayanad Landslide News Update : (God's Own Country) கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலம் தற்போது ஒரு பேரழிவை சந்தித்து வருகிறது. இயற்க்கையின் வாசம் ததும்ப ததும்ப பிரம்மிப்பில் ஆழ்த்தும் கேரளாவின் அழகு, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கோடைக் காலத்தில் கொடைக்கானல், ஊட்டியை போலவே கேரளாவுக்கும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவர். அதில் குறிப்பாக கேரளாவின் வயநாடு பகுதி சுற்றுலா தளங்களின் ராணியாக விளங்குகிறது. ஒரு பக்கம் இப்படி இருந்தாலும் மறுபக்கம் ஒவ்வொரு மழைக்கும் கேரளாவின் பாடு பெரும்பாடாகவே இருந்து வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இப்படியான சூழலில் கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு உண்டாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரழிவு ஏற்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்புக்குழுவினர் பெரும் போராட்டத்திற்கு நடுவில் மீட்டு வருகின்றனர். தற்போது 4வது நாளாக மீட்பு பணி தொடரும் நிலையில் 3,500க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முண்டக்கை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலம் வழியாக பல்வேறு உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் காணாமல் போனவர்களையும் மண்ணில் புதைந்தவர்களையும் மோப்ப நாய்கள் உதவியுடனும் கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதியில் இஸ்ரோ ராணுவத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது X தள பதிவில், “நிலச்சரிவில் தங்களது அன்புக்குரியோரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது பிரார்த்தனைகள். ஓயாமல் பாடுபட்டு வரும் மீட்புக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.
பாதிகப்பட்ட மக்களை இரண்டாவது நாளாக இன்று நேரில் சென்று பார்த்த பின்பு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நேற்று முதல் நாங்கள் பாதிகப்பட்ட மக்களை சந்தித்து வருகிறோம். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் இங்கேயே இருந்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம். மேலும், வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தர நமது காங்கிரஸ் குடும்பம் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கேரள அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவாக பல திரைப்பிரபலங்கள் நன்கொடை வழங்கி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.