இயக்குநர் பேரரசு தனது முகநூல் பதிவில், “ஒருவர் கொலை செய்யப்பட்டால் ஏன் கொலை செய்யப்பட்டார் எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலையின் பின்னணி என்ன என்பதை ஆராய்வதை விட, அதை அரசியல் கொலையாகவும், ஜாதி கொலையாகவும் மாற்றிவிடவே பலர் துடிக்கின்றனர். அனுதாபம் காட்டுவதை விட சுயலாபம் காணவே பலர் துடிக்கின்றனர்.
ஒரு கட்சி இன்னொரு கட்சிமீது பழி சுமத்துவது, இறந்தவர் மீது ஜாதி வளையம் வைத்து ஜாதி கொலையாக மாற்ற துடிப்பது இதெல்லாம் சமூக ஆரோக்கியம் இல்லை. சட்ட ஒழுங்கு பின்னடைவு என்பது வேறு, கொலைக்கு ஆளும் கட்சியை காரணம் என்பது வேறு. கொலைக்கு நியாயம் கேட்பது வேறு! கொலையில் சுயலாபம் பார்ப்பது வேறு!
கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? இந்த விடையை நோக்கித்தான் அனைவரும் நகர வேண்டும். சிலரின் யூகங்கள் சமூகத்தில் தேவையில்லாத சலசலப்பை உருவாக்கும். எல்லாவற்றிக்கும் ஜாதியை முன்னிறுத்துவது நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து விடும்!” என்று பதிவிட்டுள்ளார்.
பேரரசுவின் இந்த பதிவு தற்போது பேசுபொருளாகி உள்ளது. பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை (Armstrong Murder) செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 16 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது தப்பிச் செல்ல முற்பட்டதால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். தவிர, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் காவல் துறையினர் கையில் எடுத்து, ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சந்தேகிக்கும்படியான ரவுடிகளை கண்காணித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னை எழும்பூரில் நேற்று (ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலித் கூட்டமைப்பிரிவினர், சமூக செயல்பாட்டாளர்கள், மேலும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் உள்பட பலதரப்பிலிருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய இயக்குநர் ரஞ்சித், “ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று கூறி சமூக வலைதளங்களில் எழுதிய அயோக்கியர்கள் யார்? அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீங்கள் ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான்.
இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நீங்கள் நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம். சென்னையில் மட்டும் 40 சதவீத தலித் மக்கள் உள்ளார்கள். நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால், அரசியல் அறிவுடைவர்களாக மாறும்பொழுது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை மாறும்” என்றார்.
ரஞ்சித்தின் இந்த பேச்சிற்கு தான், இயக்குநர் பேரரசு பதிலளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக அரசியல் கொலையாகவும், ஜாதி கொலையாகவும் மாற்றிவிடவே பலர் துடிக்கின்றனர் என்று பேரரசு குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது அரசியல் படுகொலை தான் என்று ரஞ்சித் தரப்பு கூறி வருகின்றனர்.
ஜாதியை முன்னிறுத்துவது நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து விடும் என்றும் இந்த பதிவில் பேரரசு தெரிவித்துள்ளார். ஆனால், நேற்றைக்கு பேசியிருந்த இயக்குநர் ரஞ்சித் “மற்ற ஜாதி பிரச்சினைகளையும் தலித் ஜாதி பிரச்சனைகளையும் வேறு வேறு, இரண்டையும் ஒன்றாக அணுகாதீர்கள். உயர்சாதி அடக்கு முறைக்கும் எஸ்.சி., எஸ்.டி., அடக்கு முறைக்கும் வித்தியாசங்கள் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.