மதுரை பெண்கள் விடுதியில் தீ விபத்து..2 பெண்கள் உயிரிழந்த சோகம்! விடுதி வார்டன் கைது

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Sep 12, 2024 - 09:51
 0
மதுரை பெண்கள் விடுதியில் தீ விபத்து..2 பெண்கள் உயிரிழந்த சோகம்! விடுதி வார்டன் கைது
madurai fire accident

மதுரை  பெரியார் பேருந்து நிலையம் அருகே  விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலையில் ப்ரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்த இன்பா என்கின்ற பெண்மணியை திடீர்நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் உள்ளது. இந்த பகுதியில் காலணிகள் மொத்த விற்பனை நிலையங்கள் அதிகம் உள்ளது. அதே போல் பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ளதால், ஹோட்டல்கள், தங்கும் விடுதி உள்ளிட்ட பல தொழில்நிலையங்கள் செயல்படுகின்றது. இந்நிலையில் கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்துள்ளது. இதன் காரணமாக விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் மாணவிகள் அவசர அவசரமாக வெளியேறி உள்ளனர்.
 
பின்னர் தகவல் அறிந்து வந்த மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விடுதிக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்தனர். பரிமளா, சரண்யா ஆகிய இருவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். தீ விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 3 பேர் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் விடுதி உரிமையாளர் இன்பா என்பவரை கைது செய்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

தீ விபத்து நடைபெற்ற விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் ஆர்டிஓ ஷாலினி மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கட்டடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழமையான கட்டிடம் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையிலும் குறுகலான பாதை உள்ள இடத்தில் பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக இன்பா என்பவரை திடீர்நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow