ஒரே பந்தில் 13 ரன்கள்.. ஜெய்ஸ்வால் உலக சாதனை...
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 115 ரன்களே எடுத்திருந்தபோதும், இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் 102 ரன்களுக்குள் சுருண்டது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஒரே பந்தில் 13 ரன்கள் அடித்து இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை அடுத்து, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்தனர். இதனால், சுப்மன் கில் தலைமையிலான இளம்படை ஜிம்பாப்வே தொடரில் களம் கண்டது.
ஹராரேவில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி பயங்கரமாக சொதப்பியது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 115 ரன்களே எடுத்திருந்தபோதும், இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் 102 ரன்களுக்குள் சுருண்டது. இதனை அடுத்து, ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கடும் விமர்சனத்திற்கு மத்தியில் இரண்டாவது டி20 போட்டியில், களமிறங்கிய இந்திய அணி ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை பிளந்து கட்டியது. முதலில் ஆடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன்களும், ருதுராஜ் கெய்க்வா 47 பந்துகளில் 77 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து, களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 134 ரன்கள் எடுத்து, 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனையடுத்து நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியில், 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை 182 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
2-1 என்ற கணக்கில் முன்னிலையோடு ஆடிய 4ஆவது டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாக ஆடியது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, விக்கெட்டுகளையே இழக்காமல் 156 ரன்கள் எடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் [13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 93 ரன்களும், ஷூப்மன் கில் 39 பந்துகளில் [6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 58 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில், 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தனர்.
இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். ஆனால், ஒரு பந்தில் 12 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். முதல் பந்து சிக்ஸருக்கு விளாசப்பட்ட நிலையில் அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீசப்பட்ட அடுத்த பந்தையும் ஜெய்ஸ்வால் சிக்ஸருக்கு விளாசினார். இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு நோ-பால் என 13 ரன்கள் ஒரே பந்தில் எடுக்கப்பட்டது.
இதனையடுத்து, களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகன் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டது.
What's Your Reaction?