இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற நவம்பர் மாதம் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடருக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படும் தொடராக பார்டர் - கவாஸ்கர் தொடர் உள்ளது.
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், "பத்து வருடங்கள் தீர்க்கப்படாத கணக்கு இருக்கிறது. நீண்ட காலமாகிவிட்டது. குறிப்பாக எங்களது சொந்த மண்ணில் விஷயங்களைத் மாற்றியமைப்பதற்கு நாங்கள் மிகவும் பசியாக இருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும்.
என்னை தவறாக நினைக்க வேண்டாம், இந்தியா ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் அணியாக திகழ்கிறது. உண்மையிலேயே மிகவும் சவாலானது தான். ஆனால் விஷயங்களை மாற்றியமைத்து, நாங்கள் கோப்பையை திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய நான் மிகவும் பசியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வித்தியாசமான அணியாக இருப்பதை போல் உணர்கிறோம். நாங்கள் ஒரு சிறந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியாக மாறுவதற்கான பயணத்தில் இருக்கிறோம். உறுதியாக கூற முடியாவிட்டாலும், நாங்கள் அந்த பயணத்தில் இருக்கிறோம். மேலும், கண்ணியமான கிரிக்கெட் விளையாடி வருகிறோம்.
கிரிக்கட்டைப் பற்றி பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும், அதனால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய ஒருவருடன் என்னால் உரையாட முடிந்தால், எனக்குத் தெரியாத ஒன்றை எடுத்துக்கொள்ள முடியும். நாம் திறந்த மனதுடன் இருந்தால், கிரிக்கெட் விளையாட்டைப் பற்ற உலவி வரும் நிறைய அறிவுப்பூர்வமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவை இதுவரை டெஸ்ட் தொடரில் வீழ்த்தாத, சில வீரர்கள் உள்ளனர் என்று சொல்லும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுக்காக நாங்கள் அதனை செய்தாக வேண்டும், குறிப்பாக சொந்த மண்ணில். சொந்த மண்ணில் நடக்கும் ஒவ்வொரு தொடரையும் நாங்கள் வெல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கடைசியாக 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி வென்றிருந்தது. அதற்கு பிறகு நடைபெற்ற 4 தொடர்களையும் இந்திய அணியே வென்றுள்ளது. 2016, 2018, 2020, 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களை இந்தியா 2-1 என்ற கணக்கிலேயே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.