சினிமா

ஏழை சிறுவனின் தாளா சுமையும், மரணமும்.. ‘வாழை’ திரைப்பட ட்ரெய்லர்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள வாழை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஏழை சிறுவனின் தாளா சுமையும், மரணமும்.. ‘வாழை’ திரைப்பட ட்ரெய்லர்..
வெளியானது ‘வாழை' திரைப்படத்தின் ட்ரெய்லர்

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே, சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையையும், வேற்றுமையையும் பேசி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். தொடர்ந்து கர்ணன், மாமன்னன் போன்ற திரைப்படங்களிலும் படைப்புகள் வழியாக மாரி செல்வராஜ், தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘வாழை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

வாழை திரைப்படம் 23 ஆகஸ்ட் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் ‘தேன் கிழக்கு...’ கடந்த ஜுலை 18ஆம் தேதி வெளியாகியிருந்தது.

வாழை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், சினிமாவுக்கு வந்ததும் நான் முதல்ல எழுதின கதை 'வாழை'தான். 'பரியேறும் பெருமாள்' இயக்கிய பின் அடுத்து 'கர்ணன்', 'மாமன்னன்' இயக்கிக் கொண்டிருந்தபோது, 'வாழை' என் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அப்படித்தான் இப்படம் தொடங்கியது.

நான் உருவாக்கும் எல்லா கதாபாத்திரங்களும் என் வாழ்க்கையில் நான் பார்த்தது. அவர்கள் இன்னும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே எனக்குள் பதட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. நான் பட்ட கஷ்டங்களை நீங்கள்பட வேண்டும் என்று கூறி நடிகர்களிடம் வேலை வாங்கினேன். என் வாழ்வில் நடந்த ஆகப்பெரும் துயரத்தை எனது காதல் மனைவி திவ்யா தயாரிப்பார் என நான் நினைத்துப் பார்த்தது கிடையாது. பிரமிப்பாக இருக்கிறது. என் வாழ்க்கையில் மீளமுடியாத துயரம் 'வாழை'.

என்னைப்பற்றி நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கும். என்னை நீங்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் இது" என்றார். இந்நிலையில், வாழை திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

வாழை தோட்டத்தில் வேலை செய்யும் ஏழை சிறுவனின் தாளமுடியாத சுமையும், மரணமுமாக வாழை ட்ரெய்லர் காட்டப்படுகிறது. சந்தோஷ் நாராயணின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் அற்புதமாக உள்ளது.

வாழை ட்ரெய்லர் கீழே: