PCOS/ PCOD - தாய்மை அடைவதில் தடையா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
Women Health Tips in Tamil : கர்ப்பப்பை நீர்க்கட்டி (PCOD மற்றும் PCOS) என்றால் என்ன? இந்த பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை கண்டறிவது எப்படி? PCOD மற்றும் PCOS பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் கூறும் தீர்வுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
Women Health Tips in Tamil : 12 முதல் 51 வயதுக்குள் உள்ள பெண்கள் மத்தியில் PCOD, PCOS பிரச்சனைகள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் இதற்கான சரியான காரணம் தெரியாமல் இன்றளவுமே மருத்துவர்கள் குழம்பியிருக்கின்றனர். PCOD, PCOS பிரச்சனையால் அவதிப்படும் பெண்களுக்கு ஹார்மோனல் குறைபாடு ஏற்படுகின்றது. அதாவது பெண்களுக்கு கர்ப்பம் தரிக்க மற்றும் சீரான மாதவிடாய் வருவதற்கு தேவையான புரொஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஆகிய முக்கிய ஹார்மோன்கள் உற்பத்தியில் குறைபாடுகள் இருக்கும்.
உலக மக்கள் தொகையில் சுமார் 10% பெண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. PCOD, PCOS பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு மட்டுமின்றி டயபிடிஸ், மலட்டுத்தன்மை, முகப்பருக்கள், அதிகப்படியான முடி உதிர்வு உள்ளிட்ட பிற பிரச்சனைகளும் உண்டாகும். பெண்களைத் தாக்கும் இந்த முக்கிய நோய்க்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்கப்படாததே வேதனைக்குறிய ஒன்றாகும்.
PCOD மற்றும் PCOS - இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் பலரும் இருக்கின்றனர். இந்த இரண்டு பிரச்சனைகளும் ஒன்றுதான் என நினைக்கின்றனர். ஆனால் இல்லை!
PCOD மற்றும் PCOS வேறுபாடு:
PCOD (Polycystic Ovarian Disease), என்பது ஒரு சாதாரண ஹார்மோன் குறைபாடாகும். உலக அளவில் 10% பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களில் கருமுட்டையின் வளர்ச்சி குறைவாக இருக்கும். அதாவது, கருப்பையால் கருமுட்டைகளை முழுமையாக உருவாக்க முடியாது. Stress, அதிக உடல் எடை, சமநிலை இல்லாத ஹார்மோன்கள் உள்ளிட்ட காரணங்களால் இந்த நோய் உண்டாகிறது. PCOD பிரச்சனையை சரியான உணவுகள் மற்றும் மருந்துகள் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். PCOD ஒரு சாதாரண ஹார்மோன் பிரச்சனை என்பதால் பெண்கள் பயப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
PCOS (Polycystic Ovary Syndrome) என்பது PCOD பிரச்சனையே தீவிரமாக இருப்பதாகும். உலக அளவில் 0.2% - 2.5% பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வளர்சிதை மாற்றக் கோளாறான இந்த PCOS, கருப்பை முட்டை உருவாக்குவதை தவிர்க்கிறது. இதனால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. மேலும் இது, டைப் 2 டயபிடிஸ், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பிரச்சனைகளயும் ஏற்படுத்துகின்றன.
சரி PCOD மற்றும் PCOS பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி கண்டறிவது?
ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி, முகப்பரு (சிஸ்டிக் ஆக்னி), வளத்தை விட அதிகமான முடி உதிர்வு உள்ளிட்டவை பொதுவான அறிகுறிகளாகும். இவை தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. எந்த ஒரு பிரச்சனையையும் தொடக்கத்திலேயே கண்டறிந்து சரியான வைத்தியம் எடுத்துக்கொண்டால் பிந்நாளில் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்கலாம்.
PCOS/ PCOD வீட்டு வைத்தியம்:
PCOS/ PCOD ஆகியவை குறிப்பாக பெண்களின் ஹார்மோன்களைதான் தாக்குகின்றன. வீட்டிலேயே நாம் செய்யக்கூடிய சில எளிமையான செயல்கள் மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தக்கூடிய ஆண்ட்ரோஜென் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து நிறுத்தலாம்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும்:
அதிக உடல் எடையும் PCOS/ PCOD வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. பெண்கள் சராசரியாக 18.5 - 24.9 BMI-க்குள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் எடையை கட்டுக்குள் வைப்பதன் மூலம் கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள், டயபிடிஸ், ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் Dietition பரிந்துரைக்கும் ஆரோக்கியமான டயட் பிளானை மேற்கொள்ளலாம்.
கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது:
PCOS/ PCOD பிரச்சனைகள் உள்ளவர்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை (உருளைக்கிழங்கு சிப்ஸ், சோடா, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், கூல் ட்ரிங்க்ஸ்) தவிர்ப்பது சிறந்தது. இதனால் உடலில் உள்ள இன்சுலின் அளவு சீராகும். இதற்கு பதிலாக மீன், முட்டை, சிக்கன், மட்டன், நிலத்திற்கு மேல் விளையக்கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், பூசனி விதைகள், எள் மற்றும் வெண்ணெய் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடலாம். சர்க்கரை மற்றும் ஸ்ட்ராச் அடங்கிய உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிர்ச்சிகள்:
PCOS/ PCOD-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
What's Your Reaction?