Porpanaikottai Excavation : சங்க காலத் தமிழ் மன்னா்களின் கோட்டை இருந்ததற்கான அடையாளங்களுடன் காணப்படும் புதுக்கோட்டை(Pudukkottai) அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சாா்பில் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் அதிக தொல்லியல் எச்சங்கள் நிறைந்த மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் காணப்படுகிறது. அதனடைப்படையில் இங்கு அகழாய்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வு கழகத்தினர் உள்பட பலர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் தமிழக அரசு கடந்த மே மாதம் 20-ம் தேதி முதற்கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கியது. அங்கு மொத்தம் 11 குழிகள் அமைக்கபட்டு அங்கு அகழாய்வுபணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 66 நாட்களாக இங்கு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 333 தொல்பொருட்கள் கண்டறியபட்டுள்ளது.
இதில் தங்க அணிகலன், கண்ணாடி மணிகள், விலங்கு எலும்புகளில் செய்த நெசவுத் தொழிலுக்கு பயன்படும் பொருட்கள் மற்றும் கார்னிலியன் கற்கள் கண்டெடுக்கப்பட்டது. மேலும், 13ஆம் நூற்றாண்டு வரையிலான தொல் பொருட்கள் இங்கு கிடைக்கப்பட்டதால், தொடர்ந்து பண்டைய தமிழர்கள் வாழ்விடம் அமைந்தற்கான சான்று கிடைத்தது.
இந்நிலையில், பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 18ஆம் தேதி தமிழக முதலமைச்சரால் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைக்கப்பட்டது. அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை தலைமையிலான அகழாய்வுக் குழுவினர் தொடர்ந்து அகழாய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 6 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு குழியில் 280செ.மீ நீளமும், 218 செ.மீ அகலமும்கொண்ட செங்கல் தளம் காணப்பட்டது. மேலும், சுமார் 2 செ.மீ நீளமுள்ள 5 செம்பு ஆணிகள், செம்பு அஞ்சன கோல் (மைதீட்டும் குச்சி), கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதில் நேற்று வரை 519 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், கண்ணாடி மணிகள், பச்சைக் கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், அக்கேட், (Agate) சூது பவளம் (Carnelian) செவ்வந்தி கல் (Amethyst) என 470 கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன.
இதில், இன்று B 22 மற்றும் A 22 ஆகிய குழிகளில் இருந்து இரண்டு சூது பவள மணிகள் (நீ - 0.7 cm, வி- 1.1cm, எடை 0.77 gm), (நீ- 0.7 cm, வி- 0.3cm, எடை - 0.22gm) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சூது பவள மணி முழுமை பெற்ற நிலையிலும் மற்றொரு சூது பவள மணி முழுமை அடையாத நிலையிலும் கிடைத்துள்ளது.
இதே போன்று C 20 என்ற குழியில் அக்கேட் வகை மணி ஒன்றும் (நீ 0.2 CM, வி 0.4 cm, எடை 0.04 gm) கிடைத்துள்ளது. இது துளையிட தொடங்கி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு காணப்படுகிறது.
முழுமையானதாகவும் முழுமை பெறாத நிலையிலும் கிடைத்துள்ள மேற்கண்ட இந்த மணிகள் பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது.