சிஎஸ்கேவை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்! அசந்து போன தோனி! யார் இந்த விக்னேஷ் புதூர்?
ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப்பெற்றது. தோனியின் என்ட்ரீ, சிஎஸ்கே வெற்றி, அவரது மின்னல் வேக ஸ்டம்ப் அவுட் என பல மாஸ் சம்பவங்கள் இந்த மேட்சில் நடந்திருந்திருந்தாலும், இதையெல்லாம் தாண்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல்முதலாக களமிறங்கிய விக்னேஷ் புதூரின் பெயர் இந்தியா முழுக்க பேசுபொருளாகியுள்ளது.
இடது கை ஸ்பின்னரான இவர், களமிறங்கிய முதல் போட்டியிலேயே இளம் கன்று பயமறியாது என்பதற்கேற்ப சம்பவம் செய்தார். எதிரில் ஆடுவது சிஎஸ்கே என்ற அச்சமே இல்லாமல், அபாரமாக பந்துவீசிய விக்னேஷ் புதூர், அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்ந்தி அசத்தினார். இதனால் போட்டி முடியும் முன்பே விக்னேஷ் புதூரின் பெயர் ட்ரெண்டாக, யார் இவர், எங்கிருந்து வந்தார் என பலரும் தேட ஆரம்பித்தனர்.
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் விக்னேஷ் புதூர். இவரது தந்தை சுனில் குமார் ஆட்டோ டிரைவர் ஆவார். குடும்பத்தின் ஏழ்மை நிலையை புரிந்துக்கொண்ட விக்னேஷ் புதூர், கல்வியில் தனது முழு கவனத்தை செலுத்தியுள்ளார். பள்ளி பருவத்தை முடித்துவிட்டு மலப்புறத்தில் இருந்து திருச்சூருக்கு சென்று அங்கு St Thomas கல்லூரியில் இலக்கிய பிரிவில் படித்து வந்த இவரை கிரிக்கெட் கனவு தூங்கவிடவில்லை. கிரிக்கெட் மீதிருந்த அதீத ஆர்வத்தால், கல்லூரியின் அணிக்காக விளையாடத் தொடங்கியுள்ளார். அப்போது விக்னேஷுக்கு தெரியாது, அவர் ஒருநாள் ஐபிஎல்லில் விளையாடப் போகிறார் என்று.
கல்லூரி அளவிலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், விக்னேஷ் புதூரின் கிரிக்கெட் கனவை அவரது பெற்றோர்களும் ஆதரித்து வந்தனர். விக்னேஷ் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிதவேகப் பந்து வீச்சாளராக தான் (medium pacer) தொடங்கினார், ஆனால் உள்ளூர் வீரர் முகமது ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில் சுழற்பந்து வீச்சுக்கு மாறியுள்ளார். கேரளாவின் U-14 மற்றும் U-19 அணிகளில் விளையாடிய அவர், இதன்பிறகு கேரளா கிரிக்கெட் லீக், தமிழ்நாடு பிரீமியர் லீக் என பல போட்டிகளில் விளையாடத் தொடங்கியுள்ளார்.
இப்படி பலனை எதிர்பாராமல் கிரிக்கெட்டே மூச்சென இருந்த விக்னேஷ், 2024 ஆம் ஆண்டு கேரள கிரிக்கெட் லீக்கில் விளையாடும் போது, மும்பை இந்தியன்ஸ் திறமை தேடல் குழுவினரின் கவனத்தை ஈர்த்தார். அங்கு அவரது தனித்துவமான "சைனாமேன்" (chinaman) பந்து வீச்சு பாணி அவருக்கு வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இதனால் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில், மும்பை இந்தியன்ஸ் அவரை SA20 தொடரில் MI கேப்டவுன் அணியில் நெட் பவுலராக (net bowler) பயிற்சிக்கு அனுப்பியது. அங்கு அவர் உலகின் சிறந்த மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரஷீத் கானுடன் பயிற்சி பெற்றார். அதன்பின்னரே ஐபிஎல்லின் 18வது சீசனில் விளையாட 24 வயதேயான விக்னேஷ் புதூரை, 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது மும்பை அணி. இவரை மும்பை அணி தேர்வு செய்தபோது யார் இவர், எதற்கு இவரை எடுக்க வேண்டும் என பல கேள்விகளை முன்வைத்தனர்.
அதற்கெல்லாம் தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக முதல் மேட்சிலேயே, சிஎஸ்கேவை அதன் சொந்த மண்ணிலேயே கதிகலங்கி போகும் அளவிற்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி ’யார்ரா இந்த பையன்’ என மொத்த இந்தியாவைவே வாயடைத்து போகும் அளவிற்கு அசத்தியுள்ளார் விக்னேஷ் புதூர். என்னதான் இந்த மேட்ச்சில் சிஎஸ்கே அணி ஜெயித்திருந்தாலும், தோனியே வந்து விக்னேஷ் தோளில் தட்டிக்கொடுத்து அவரை பாராட்டி சென்ற சம்பவமெல்லாம் நடந்தது.
விக்னேஷ் புதூருக்கு கிரிக்கெட் மீதுள்ள காதலும், அதற்காக அவர் செய்த தீவிர பயிற்சியும் தான் இந்த முதல் ஆட்டத்திலேயே அவருக்கு இத்தனை பாராட்டையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்றே கூறவேண்டும். குடும்பத்தின் ஏழ்மை நிலையிலும், கனவை விடாமல் துரத்திய விக்னேஷ் போன்ற வீரர்களை பார்த்தால் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது, 'UNIVERSE ALWAYS FALLS IN LOVE WITH A STUBBORN HEART'....
What's Your Reaction?






