கங்குலி, பாண்டிங் இல்லை.. டெல்லி அணிக்கு பயிற்சியாளராகும் தமிழக வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஹேமங் பதானி டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 7 சீசன்களாக டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 2 முறை உலகக்கோப்பையை வென்று கொடுத்திருந்தாலும், டெல்லி அணிக்காக ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை.
ஆனாலும், இவரது தலைமையிலான டெல்லி அணி 2019ஆம் ஆண்டு தொடரில் டாப்-4 இடத்திற்குள் வந்தது. 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்த டெல்லி அணி, மும்பை அணியுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி பஞ்சாப் கிங்ஸுக்கு தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.
இதனையடுத்து, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் ஹேமங் பதானி டெல்லி அணியின் பயிற்சியாளராகவும், வேணுகோபால் ராவ் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஏற்கனவே, டெல்லி அணியின் இயக்குநராக செயல்பட்டு வந்த சவுரவ் கங்குலி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் பிரிவு கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹேமங் பதானி வெறும் 4 டெஸ்ட்கள் 40 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள நிலையில், டெல்லி அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. ஆனாலும், சி.எஸ்.கே. அணி தொடக்க கால கட்டத்தில் விளையாடியுள்ள பதானி, தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், சேப்பாக்கம் அணிக்கு வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்துள்ளார்.
அவர் தலைமையிலான சேப்பாக்கம் அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதேபோல், 2022ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும், லங்கா பிரிமியர் லீக் தொடரில், ஜாஃப்னா கிங்ஸ் அணியின் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.
அதேபோல டெல்லி அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள வேணுகோபால் ராவ், 2005 ஆம் ஆண்டும் முதல் 2006ஆம் ஆண்டு இந்திய அணிக்காக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும், 2009ஆம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?