திமுக ஆட்சியில் நாளை உயிருடன் இருப்போமா என்று தெரியாது - இபிஎஸ் கடும் விமர்சனம்

2021 தேர்தலில் திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டது. 15 அறிவிப்புக்கு தான் நிறைவேற்றி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சரண்டர் விடுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தியதாக தவறான தகவலை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளனர்.

Mar 23, 2025 - 19:33
Mar 23, 2025 - 19:34
 0
திமுக ஆட்சியில் நாளை உயிருடன் இருப்போமா என்று தெரியாது - இபிஎஸ் கடும் விமர்சனம்

திமுகவின் வாக்குறுதியை நம்பி உருகி போய் ஓட்டு போட்டார்கள், இப்போது காய்ந்து போய் போராட்டம் நடத்துகிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வாக்குகளை பெறுவதற்காக அறிவிப்புகள்

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் தேர்தலுக்காக வாக்குகளை பெறுவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாகதான் பார்க்க முடிகிறது.

Read more: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த நடிகர் ரவி மோகன்

4 ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு போன்றவற்றின் மூலம் அனைத்து வகைகளிலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்காண்டு கால திமுக ஆட்சியில் உள்ள பிரச்சினைகளை மறைக்கவே இதுபோன்ற நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றி உள்ளார். தொகுதி மறுசீரமைப்பை நாடாளுமன்றத்தில் பேசவேண்டும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அதில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொண்டிருந்தால் ஸ்டாலின் எடுக்கும் முயற்சி பலனளிக்கும் என்று சொல்லலாம்.

எதிரியை முறியடிக்க வியூகம்

நேற்றைய தினம் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டது. திமுக ஆட்சியில் லஞ்சம், ஊழல் மறைக்க நடந்த நிகழ்ச்சி. அதிமுக மக்கள் பிரச்னையைதான் பேசுகிறோம். தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது செய்தி வந்துள்ளது. இதன்மூலம் திமுக ஆட்சியில் ஊழல் நடந்தது நிரூபணம் ஆகியுள்ளது. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலுமே ஊழல் நடைபெற்றுள்ளது.

அதிமுக மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இயக்கம். இன்றுவரை சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வது குறித்த திட்டம் எதுவும் இல்லை. நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் தேர்வு குறித்து அறிவிப்பு வந்தவுடன் அதுகுறித்து முடிவு சொல்லுவோம்.அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு, கொள்கை நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரியை முறியடிக்க வியூகம் அமைத்து அதிக வாக்குகள் பெற்று எதிரியை வீழ்த்துவது.திமுகவைபோல் நிரந்தரமான கூட்டணி கிடையாது. அப்படி ஒரு கூட்டணி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் எதற்கு தனி, தனி கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விடலாமே. 

சாதிவாரி கணக்கெடுப்பு

அதிமுகவைப் பொறுத்தவரை மக்கள் பிரச்சினையை பேசும் கட்சி. ஆனால் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. முதலமைச்சருக்கு தவறன புள்ளி விவரங்கள் தந்துள்ளனர். தங்கம், வெள்ளி விலை நிலவரம்போல் கொலை நிலவரம் பற்றி செய்திகள் வெளியாகிறது. அதன் அடிப்படையில் தான் நாங்களும் பேசுகிறோம். தங்கள் அரசின் மீது குறை கூறவில்லை நடைபெறும் சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறோம். சாலையில் செல்பவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Read more: அண்ணாமலை மீதான மதிப்பீட்டை அவரே குறைத்துக்கொண்டார்- துரை வைகோ எம்.பி கருத்து

திருநெல்வேலியில் ஜாகீர்உசேன் வெட்டி கொல்லப்படுகிறார். காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டவருக்கு பாதுகாப்பு தரவில்லை. மாறாக கட்டப்பஞ்சாயத்துதான் நடக்கிறது. குரல் பதிவு வெளியிட்டு தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார் அதையும் பொருட்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் இன்று இருப்பவர்கள், நாளை உயிருடன் இருப்போமா, இல்லையா என்று தெரியாது என்ற நிலைதான் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. அதனால் ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போடுகிறார்.

அதிமுக மக்களை காக்கும் அரசாக இருந்தது

2021 தேர்தலில் திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டது. 15 அறிவிப்புக்கு தான் நிறைவேற்றி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சரண்டர் விடுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தியதாக தவறான தகவலை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளனர். அதிமுக ஆட்சியின்போது கொரோனா காலகட்டம், அப்போது யாரும் வேலைக்கு வரவில்லை. அதனால் அவர்களுக்கு கொடுக்க முடியாது. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பல திட்டங்களை நிறுத்தியது தான் திமுக ஆட்சியின் சாதனை.

அதிமுக பொறுத்தவரை எது, எது சாத்தியம், எது, எது சாத்தியம் இல்லை என்பதை ஆராய்ந்து தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம். திமுக போல் கவர்ச்சிகரமான திட்டத்தை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்ற பிறகு அந்தர் பல்டி அடிப்பார்கள். திமுகவின் வாக்குறுதியை நம்பி அனைவரும் உருகி போய் ஓட்டு போட்டார்கள். இப்போது காய்ந்து போய் போராட்டம் நடத்துகிறார்கள். அதிமுகவை பொருத்தவரை மக்களுக்கு எது நல்லதோ அதை செய்வோம். அதே நேரத்தில் நிதி நிலைமையையும் பார்ப்போம். அதிமுக மக்களை காக்கும் அரசாக இருந்தது. அதனால் தான் மக்களிடம் செல்வாக்கு குறையாமல் இருக்கின்றோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow