ஆதவ் அர்ஜுனா விலகல்.. நடைமுறையை உள்வாங்கவில்லை.. திருமாவளவன் குற்றச்சாட்டு
ஆதவ் அர்ஜுனா, அமைப்பு நடைமுறைகளை உள்வாங்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை மும்முரமாக பார்த்து வருகிறார். இதனிடையே, ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் கொள்கைகள் திமுக-வை எதிர்ப்பது போல் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் செய்தி உலா வருகிறது. அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளத்தில் திமுக-தவெக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்து வழங்கிய 'எல்லோருக்குமான அம்பேத்கர்’புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட அதனை திருமாவளவன் பெற்றுக்கொள்வதாக இருந்தது. திடீரென திருமாவளவன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள் திருமாவளவனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆதவ் அர்ஜுனாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆறு மாதம் இடைநீக்கம் செய்வதாக திருமாவளவன் அறிவித்தார். இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.
இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்படையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன்.
எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன். அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது, ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. உடனே சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், ஒரு கட்சிக்குள்ளே வந்த பிறகு அவர் என்ன நினைத்தாலும் அது கட்சியின் மூலமாக வெளிப்பட வேண்டும். கட்சி எடுக்கும் முடிவு தனி நபராக இருக்கும் தலைவர் முடிவு அல்ல. முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும் போது உயர்நிலை குழுவிடம் கலந்தாலோசிப்பது நடைமுறையாக உள்ளது. ஆனால், அவர் அதை இன்னும் உள்வாங்கி கொள்ளவில்லை. ஒரு அமைப்பின் நடைமுறையை உள்வாங்கி கொள்வது முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?