“காமராஜரை இழிவாக பேசிய ராஜிவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - சரத்குமார் ஆவேசம்!

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திமுக மாணவரணி ராஜீவ்காந்தி மீது நடவடிக்கை தேவை என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Oct 23, 2024 - 01:46
 0
“காமராஜரை இழிவாக பேசிய ராஜிவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - சரத்குமார் ஆவேசம்!
“காமராஜரை இழிவாக பேசிய ராஜிவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - சரத்குமார் ஆவேசம்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் அன்பகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரை பற்றி திமுக மாணவரணி நிர்வாகி ராஜீவ்காந்தி சர்ச்சைக்குரிய விதமாக பேசிய காணொளியை பார்க்க நேர்ந்தது.

மூடப்பட்ட 6000 பள்ளிகளை மட்டுமே காமராஜர் அவர்கள் திறத்தார் எனவும், அவரது சொந்த காசிலா பள்ளிகளை திறந்தார் எனவும் பெருந்தலைவரை இழிவுபடுத்தி, வரலாற்றை திரித்து ஏற்றுக்கொள்ள முடியாத ராஜீவ்காந்திக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தலைவர் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளை மட்டும் திறக்கவில்லை. கூடுதலாக 12,000 புதிய பள்ளிகளையும், அதுவும் ஒரு மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி, 3 மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, 5 மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி அமைய வேண்டும் என திட்டம் தீட்டி, 500 மக்கள் தொகை கொண்ட கிராமத்திலும் பள்ளிக்கூடங்களை உருவாக்கியவர் தேரிய அளவில் கல்வியில் தமிழ்நாடு இன்று முன்னிலை வகிக்கிறது என்பதற்கும், தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவில் பரந்து விரிந்து பணி செய்கிறார்கள் என்பதற்கும் 70 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1954 முதல் 1963 வரை பெருந்தலைவர் தமிழ்நாட்டில் விதைத்த மக்கள் நலத்திட்டங்கள் & செயல்பாடுகள்' என்னும் விதை தான் காரணம்.

பள்ளிக்கூடத்தில் சிறுவன் ஒருவன் மயங்கியதை கண்டும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஆடுகளை மேய்ப்பதை கண்டும் வேதனையில் வாடியவர், பசியினை போக்க மதிய உணவுத் திட்டம் வழங்கி தீர்வு கண்டார். இவரது அளப்பரிய கல்விப் பணிகளால் கல்விக்கண் திறந்தவர் என தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டு பெற்றவர்.

இன்று உங்கள் சுய அரசியல் லாபத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஓர் உன்னத தலைவரை இழித்தும், பழித்தும், வரலாற்றை மறைத்தும் பேசுவதை என்னாலும், என்னை போன்ற பெருந்தலைவரின் விசுவாசிகளாலும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எந்தவொரு அரசியல் தலைவரும் சொந்த பணத்தில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதில்லை. ஆனால், நிதிநெருக்கடியில் பள்ளிக்கூடங்களை நடத்துவதும், மதிய உணவு வழங்குவதும் சாத்தியமா என அதிகாரிகள் கலக்கமடைந்த நிலையில், நிதியை தானமாக பெறவும் தயங்காது, உற்பத்தியை பெருக்கி, பள்ளிகளுக்கென நிதி திரட்டியவர் பெருந்தலைவர்.

எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தாலும் கல்வி புரட்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர், பெரியாருடன் கொண்ட நட்புறவு குறித்து தெரியாத மூடர்கள் உங்கள் இயக்கத்தினரை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கியவர் என பெருந்தலைவரை புகழ்ந்தவர் ஈ.வெ.ரா. பெரியார். அவரை கிராவிட இயக்கங்கள் முன்னோடியாகக் கொண்டு செயல்படுவதால், தேசிய அளவில் கிங் மேக்கராக செயல்பட்ட பெருந்தலைவரை தாழ்த்தி பேசியது கண்டனத்திற்குரியது.

நாட்டுமக்களின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டு, தலைமை பண்புக்கு உதாரணமாக, எளிமையின் திருவுருவாக, தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தி இன்றைய தமிழ்நாட்டின் அனைத்துவித வளர்ச்சிக்கும் வேராக திகழும் பெருந்தலைவர் குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துகள் இனி வரும் எந்தவொரு காலங்களிலும், எவரும் பேசாத வகையில் ராஜீவ்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தலைமையிலான தமிழக அரசிடம் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பெருந்தலைவரை பின்பற்றும் என்னைப் போன்ற லட்சக்கணக்கான மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow