விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது... தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்னென்ன?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்பிறகு ஆளும் கட்சியான திமுக முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தது. திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. மேலும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
3 முக்கிய வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 29 பேர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதே வேளையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அதனுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிரடியாக அறிவித்தன.
பின்பு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்தது. திமுக சார்பில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் ஆகியோர் முகாமிட்டு பிரசாரம் செய்தனர். திமுக எம்.பி கனிமொழியும் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மேலும் திமுக கூட்டணி கட்சிகளான விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், இடதுசாரி கட்சித் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டவர்களும் அன்னியூர் சிவாவை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு திமுகவுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என விக்கிரவாண்டி மக்களை கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர். மறுபக்கம் பாஜக கூட்டணியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜகவின் சரத்குமார் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகளை திரட்டினார்கள்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததை அடுத்து வெளியூர் நபர்கள் 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?