திமுக பாதையில் விஜய்... உதயநிதிக்கு பயங்கர புரோமோஷன்... வெளுத்து வாங்கும் அர்ஜுன் சம்பத்!

உதயநிதியை ப்ரொமோட் செய்வதற்காக சீனியர் அமைச்சர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

Oct 16, 2024 - 21:52
 0
திமுக பாதையில் விஜய்... உதயநிதிக்கு பயங்கர புரோமோஷன்... வெளுத்து வாங்கும் அர்ஜுன் சம்பத்!

சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், “மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து விமர்சிக்காமல் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் நேரடியாக களத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்களை மீட்பது மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். புகைப்படம் எடுத்து வெளியிடக்கூடிய அரசியலைத்தான் திமுக செய்து வருகிறது. ஒரு சில ஊடகங்களும் அந்த கட்சிக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. களத்தில் பணியாற்றும் அனைத்து முன்கள பணியாளர்களையும் அமைச்சர்களையும் பாராட்டுவது ஆளுநர் கொடுத்த சான்றாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 

வருகிற 27ஆம் தேதி நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெறுகிறது.  நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறோம்.  திரைத்துறையில் உச்சம் தொட்ட நடிகர் ஜோசப் விஜய், திரைத்துறையில் நல்ல வருவாய் இருக்கக்கூடிய அவர் மக்களுக்காக சேவை செய்ய வருவதை வரவேற்கிறோம். ஆனால் விஜய் அரசியலுக்கு வந்து இன்னொரு கழகமாக இருக்கிறார். திமுக, அதிமுகவை தொடர்ந்து தற்போது தமிழக வெற்றி கழகம் என நிறைய கழகங்கள் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளன. திமுகவும் மத்திய பாஜக அரசை ஒன்றிய அரசு என்கிறது. அதே போல் நடிகர் விஜய்யும் பாஜகவை ஒன்றிய அரசு என அழைக்கிறார். நீட் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டையே தவெக தலைவர் விஜய்யும் எடுத்து இருக்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு திமுகவும் வாழ்த்து சொல்வது கிடையாது. அதேபோலத்தான் தற்போது விஜய்யும் வாழ்த்து சொல்லவில்லை. விஜயதசமி ஆயுத பூஜைக்கு விஜய் வாழ்த்து சொல்லியுள்ளார். அவரது அரசியல் நடவடிக்கைகளை மட்டுமே நாங்கள் விமர்சிக்கிறோம். மற்றப்படி அவரது கட்சியின் மாநாடு வெற்றிகரமாக அமையட்டும்.

தீபாவளி பண்டிகையை குடிகார பண்டிகையாக மாற்றிவிட்டனர். அரசு டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு டார்கெட் இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு மது விற்பனையை அதிகரிக்கிறது. தீபாவளி மற்றும் அதற்கு முன்-பின் ஆகிய 3 நாட்கள் அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும். திமுக நேற்று ஒன்று பேசும் இன்றைக்கு ஒன்று பேசும். திமுக வாரிசு அரசியல் செய்து வருகிறது. திமுக அமைச்சரவையில் எத்தனையோ மூத்த அமைச்சர்கள் இருக்கின்றனர்.‌ தற்போது சென்னை புயல் வெள்ள நிவாரண பணிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சீனியர் அமைச்சர்களுக்கு வழங்கப்படுவது கிடையாது. உதயநிதியை ப்ரொமோட் செய்வதற்காக சீனியர் அமைச்சர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். 

பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோர் வட மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.‌ வயநாடு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களை முட்டாளாக நினைத்து வருகின்றனர். சாம்சங் நிறுவனம் வேறு நாட்டுடையது. இதனுடைய உற்பத்தியை தடுக்க வேண்டும். இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியை முடக்க வேண்டும் என்பதில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதியாக இருந்து வருகின்றனர். சாம்சங் விவகாரத்தில் ஆளும் திமுக அரசு இருதலை நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினர் சீனாவின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருகின்றனர்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow