அரசியல்

திருமாவளவன் காலம் தாழ்த்தி விட்டார்.. என்னை ஜெயிக்க வையுங்கள்.. அணல் பறந்த சீமானின் பேச்சு!

நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசுகள் கிராமப்புறங்களை கண்டு கொள்வதில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

திருமாவளவன் காலம் தாழ்த்தி விட்டார்.. என்னை ஜெயிக்க வையுங்கள்.. அணல் பறந்த சீமானின் பேச்சு!
என்னை ஜெயிக்க வையுங்கள்.. அணல் பறந்த சீமானின் பேச்சு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பதை வரவேற்கிறேன். பாஜக வராது ஏனென்றால் அது மதவாத ஆற்றல் என்று திருமாவளவன் தெரிவிக்கிறார். ஆனால் அவர் தற்போது கூட்டணி வைத்திருப்பது மதுவாத ஆற்றல். கடந்த 2021 ஆம் ஆண்டு மரக்காணத்தில் 19 பேர் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தனர். 2024 ஆம் ஆண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்துவதன் அவசியம் என்ன. அந்த நேரமே நடத்தி இருக்கலாம். மது ஒழிப்பு மாநாடு முடிவில் திருமாவளவன் காலம் தாழ்த்தி விட்டார்.  சாதிய ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு சமூக முன்னேற்ற மேம்பாடு என்று பேசுவது மலக்குழியின் மேல் அமைக்கும் மல்லிகை பந்தல். சாக்கடையில் மேல் அணியக்கூடிய சந்தனமாலைக்கு சமம் என அண்ணல் அம்பேத்கர் தெரிவிக்கிறார். உயர்ந்த சமுதாயத்தில் இருப்பவர்கள் கீழே வரமாட்டேன் என்றால் கீழே இருப்பவர்கள் எந்த காலத்திலும் மேல வர இயலாது. 

தற்போது கல்வியே சமமானதாக இல்லை. ராஜபாளையத்தில் உள்ள கல்விக்கும் சென்னையில் உள்ள கல்விக்கும் வேறுபாடு இருக்கிறது. கேந்திரா வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்இ பாடத்திட்டம் உங்களிடம் இல்லை. முதல் தர ஆசிரியர் நகர்ப்புறங்களில் பணியமடுத்தப்படுகிறார். மூன்றாவது தர ஆசிரியர் கிராமப்புறங்களில் பணியாபடுத்தப்படுகிறார். ஸ்மார்ட் சிட்டி என்றுதான் சொல்கிறார்களே தவிர ஸ்மார்ட் வில்லேஜ் என சொல்வதில்லை. நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசுகள் கிராமப்புறங்களை கண்டு கொள்வதில்லை. எந்த ஒரு அடிப்படை வசதியும் கிராமங்களில் போதுமானதாக இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாடத்திட்டம் சமமாக இருக்கிறதே தவிர கல்வி கற்பிப்பதில் கல்வி கற்பதற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள வசதியில் சமச்சீர் இல்லை. இதே நிலைதான் சமத்துவ புரத்திலும் தொடர்கிறது. 

மேலும் படிக்க: ரெயின் கோட்-ஐ எடுத்துக்கோங்க... மிதமான மழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை!

மாற்றுத்திறனாளையும் நல்ல உடல்வாகு கொண்டவரையும் ஒரே மைதானத்தில் ஓடி வெற்றி பெற சொல்ல வேண்டுமானால் அது எவ்வாறு நடக்கும். விடுதலை பெற்ற நாட்டில் தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்ற முடியவில்லை. தாழ்த்தப்பட்ட தலைவரின் கையில் இருந்து மிட்டாய்களை கூட வாங்காமல் மாணவர்கள் கலைந்து செல்கின்றனர். அந்த பிஞ்சு நெஞ்சுக்குள் சாதிய வன்மம் புகுத்தப்பட்டுள்ளது. இந்தியா உலகத்திலே மாட்டிறச்சி அதிக ஏற்றுமதி செய்யும் நாடு. ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் டன் ஏற்றுமதி செய்கிறது. பால் ஏற்றுமதியில் பிரேசிலை முந்தி இந்தியா வருகிறது. மாடு வளர்ப்பதில் என்ன பிரச்சனை. பால் உற்பத்தி ஏன் செய்யவில்லை. இன்னும் 11 மாதம் கொடுத்தால் மேய்ச்சல் நிலம் உருவாக்கப்படும். 

பெட்ரோல் டீசல் விலையின் மூலப்பொருள் குறைந்தாலும் விற்பனை விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் எண்ணை நிறுவனங்கள் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் தான். அதற்கு ஜிஎஸ்டியும் கிடையாது. முதலாளிகளுக்கான பொருளாதாரக் கொள்கையை வகுத்து சட்ட வரைவுகளை கொண்டு வரும்போது பாதிப்பு ஏற்படுகிறது. முதலாளிகளின் லாபத்திற்காக உருவாக்கப்பட்ட பொருளாதார கொள்கையின் விளைவு இது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. காய்கறி விலை போக்குவரத்து செலவு காரணமாக இரண்டு மடங்காக உயர்கிறது. இதனால் மக்கள் வாழ முடியாத நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் இதற்கு ஒரே வழி என்னை வெற்றி பெற செய்யுங்கள்” என அணல் பறக்கப் பேசினார்.