தவெகவின் முதல் பொதுக்குழு? எங்கே? எப்போது? அதிரடி காட்டும் விஜய்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட உள்ளதாகவும், அதற்கான இடம் மற்றும் தேதியை தவெக தலைவர் விஜய் குறித்துவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தவெக முதல் பொதுக்குழு எப்போது, எங்கே நடக்கிறது? விரிவாக பார்ப்போம் இந்த செய்தி தொகுப்பில்.

வெற்றிக்கரமாக வெற்றிக் கழக மாநாட்டை நடத்தி முடித்த கையோடு, சட்டமன்றத் தேர்தல் வெற்றியை நோக்கி அடுத்தடுத்த காய்களை நகர்த்தி அரசியல் கட்சிகளை திணறடித்து வருகிறார் தவெக தலைவர் விஜய். தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம், மாவட்ட நிர்வாகிகள், அணிகள், என அடுத்தடுத்து தடாலடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள விஜய், கட்சியின் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 2, 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் விஜய் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. தேர்தல் ஆணைய விதிகள்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி ஆண்டுத்தோறும் பொதுக்குழுவை கூட்டம் வேண்டும் என்பது சட்டம். விஜய் கட்சித் தொடங்கி ஓராண்டை நிறைவு செய்திருந்தாலும், இன்னும் பொதுக்குழுவை கூட்டவில்லையே ஏன்? என்ற கேள்விகள் பனையூரை நோக்கி வைக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தல் சமயம் என்பதால், அதற்கு முன்னதாக பொதுக்குழுவை கூட்டிவிட்டு, சுற்றுப்பயணத்திற்கு தயாராக வேண்டும் என்று விஜய் நினைப்பதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கான பணிகளை மேற்கொள்ள கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் ஆர்ஜூனா ஆகியோரிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து, ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த YMCA மைதானத்தில் நடத்த அனுமதி கேட்கப்பட்டதாகவும், அனுமதி மறுக்கப்பட்டுவிட்ட நிலையில், அதனால் வேறு இடத்தை முடிவு செய்யும் நிலைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. YMCAக்கு அடுத்த தவெகவின் சாய்ஸாக இருப்பது மாமல்லப்புரம் என்றும், மாமல்லப்புரத்தில் அருகே உள்ள பூஞ்சேரி தனியார் விடுதியில் பொதுக்குழுவை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொதுக்குழு நடத்தப்படும் இடம், வாகன நிறுத்தம் இடங்கள், பங்கேற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட அரங்குகள் உள்ளிட்டவற்றை, புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் ஆர்ஜூனா ஆகிய மூவர் நேரில் சென்று பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவிலேயே பொதுக்குழு நடைபெறும் இடம், தேதி ஆகியவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகையச் சூழலில், தவெக தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை, அவருக்கான அதிகாரங்கள் என்னென்ன என்பன உள்ளிட்ட தகவல்களும் பனையூர் வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளன.
அதாவது, அடிப்படை உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே தவெகவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் பதவிக்கான உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்பதால், தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் நிறுவன உறுப்பினராக நான்கு ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு, தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் மாவட்ட அல்லது மாநில அளவில் 4 ஆண்டுகள் நிர்வாகியாக பணியாற்றியிருக்க வேண்டும் என்பதோடு, தலைவர் பதவி விலகினால், உடனடியாக பொதுக்குழு கூடி இடைக்கால தலைவரை தேர்வு செய்யலாம் என்றும் கட்சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, தலைவரின் அதிகாரமாக, கட்சியின் அனைத்து விதமான அசையும், அசையா சொத்துக்களுக்கும் தலைவரே பொறுப்பாளராக இருப்பார் என்றும், கட்சியின் அவசரத் தேவை கருதி தலைவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு என்றாலும் அந்த முடிவுக்கு அடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கட்சிக்காக வாங்கப்படும் அல்லது விற்கப்படும் சொத்துக்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தலைவர் பெயரில் மட்டுமே நடைபெறும் என்றும், தேர்தல், வேட்பாளர் தேர்வு, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து விதமான கோப்புகளில் கையெழுத்திடும் அதிகாரம் தலைவருக்கு மட்டுமே உண்டு என்றும் தவெக சட்டவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழலில், விரைவில் கூட உள்ள தவெக பொதுக்குழுவில் இன்னும் பல விதிகள் கட்சியில் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
What's Your Reaction?






