”இதய வாசலை திறந்து வைத்திருப்பேன்... 2026 தான் இலக்கு.. தவெக மாநாட்டில் கூடுவோம்..” விஜய் கடிதம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்காக விஜய் மூன்றாவது கடிதம் வெளியிட்டுள்ளார்.

Oct 25, 2024 - 16:47
 0
”இதய வாசலை திறந்து வைத்திருப்பேன்... 2026 தான் இலக்கு.. தவெக மாநாட்டில் கூடுவோம்..” விஜய் கடிதம்!
தவெக மாநாடு - தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்க மாநில மாநாடு, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கும் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை, சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தவெக மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய், மூன்றாவது கடிதம் வெளியிட்டுள்ளார். முதல் கடிதத்தில் தவெக மாநாட்டில் கட்சித் தொண்டர்கள் எவ்வாறு பங்கேற்க வேண்டும், கடைபிடிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்னென்ன என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல், கடந்த வாரம் எழுதிய இரண்டாவது கடிதத்தில், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், முதியவர்கள் நீண்டதூரம் பயணித்து மாநாட்டுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாவது கடிதம் எழுதியுள்ள விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. 

மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனதிற்கும் கள வளாகத்திற்கும் வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள். நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். 

நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம் என எழுதியுள்ளார். இக்கடிதம் தவெக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு, விஜய் வரும் வழியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரோஜா நகர் என்ற பகுதி வழியே மாநாடு திடலுக்கு வந்து, நேரடியாக மேடைக்கு செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow