அரசியல்

செஞ்சி மஸ்தான் IN 4 மா.செக்கள் OUT வெளியான அதிரடி அறிவிப்பு..!

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக-வும் மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்து அதிரடி காட்ட தொடங்கி இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மாற்றம் என்ன பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில். ..

செஞ்சி மஸ்தான் IN 4 மா.செக்கள் OUT வெளியான அதிரடி அறிவிப்பு..!
செஞ்சி மஸ்தான் IN 4 மா.செக்கள் OUT வெளியான அதிரடி அறிவிப்பு..!

திமுகவிலேயே 100க்கும் குறைவான மாவட்டச் செயலாளர்களே இருக்கும் நிலையில், தவெகவின் 100+ மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டது திமுக தலைமையை கடும் டென்ஷனாக்கியதாகச் சொல்லப்பட்டது. இதனால், ஏற்கனவே திமுக போட்ட பிளான்களை Execute செய்ய தலைமை உத்தரவிட்டதின் பேரில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதாவது, திமுகவை பொறுத்தவரை இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க ஏற்கனவே கணக்கு போட்டுத்தான் அதற்கான பணிகளை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. சீனியர்கள், ஜூனியர்கள் என சரிசமமாக பிரித்து, கட்சியின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்வதோடு, சின்னவருக்கு ஏற்றவாறு செயல்படுவோரையும் நியமனம் செய்யவே திமுக தலைமை திட்டமிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன. 

அதன்படி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை மாற்றியும், புதியவர்களை நியமித்தும் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த சில மாதங்களாகவே எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள மாற்றலாம் என்ற லிஸ்ட் துணை முதலமைச்சரின் குறிஞ்சி முகாமில் தயாராகி வந்ததாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

அந்தவகையில், சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் திருச்சி, உட்பட 37 மாவட்டங்களில் கூடுதலாகவும் புதிதாகவும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்தன. 

இந்த நிலையில், முதற்கட்டமாக ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அறிவாலயம். 

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி சட்டடமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அந்தியூர், பவானிசாகர், கோபிசெட்டி பாளையம் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக என். நல்லசிவம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகி பல ஆண்டுகளாக சைலண்ட் மோடில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திற்கு, பவானி, பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

பல்லடம், திருப்பூர் தெற்கு தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக க.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 

காங்கேயம், தாராபுரம் தொகுதிகளை உள்ளட்டக்கிய திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அவினாசி, திருப்பூர் வடக்கு தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக என்.தினேஷ் குமாரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக இல. பத்மநாபனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட செஞ்சி மஸ்தானை மீண்டும் மாவட்ட செயலாளராக்கியுள்ளது தலைமை. செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் வடக்கு தொகுதி மாவட்ட செயலாளராக மாஜி செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் பொன்முடியின் மகனும், முன்னாள் எம்பியுமான கௌதம சிகாமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

வானூர் மற்றும் விழுப்புரம் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக டாக்டர். ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டு உள்ளார். 

கோ. தளபதியிடம் இருந்த மதுரை கிழக்கு தொகுதியை கூடுதலாக ஒதுக்கி வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார். 

மதுரை வடக்கு, மத்திய தெற்கு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

இப்படி, ஈரோடுக்கு கூடுதலாக ஒரு மாவட்டச் செயலாளரையும், திருப்பூருக்கு கூடுதலாக 2 மாவட்டச் செயலாளர்களையும், விழுப்புரத்தில் கூடுதலாக ஒரு மாவட்டச் செயலாளரையும் நியமித்துள்ளது தலைமை. 

தொடர்ந்து, சில மாவட்டச் செயலாளர்களை கழட்டியும் விட்டுள்ளது. அதாவது, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த க.அண்ணாதுரைக்கு பதிலாக பழனிவேல் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக இருந்த டி.பி.எம் மைதீன் கானுக்கு பதிலாக அப்துல் வகாப் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக  உள்ள டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜனுக்கு பதிலாக எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் புதிய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

நீலகிரி மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் பா.மு.முபாரக்கிற்கு பதிலாக கே.எம்.ராஜு புதிய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

திமுகவின் இந்த அதிரடி அறிவிப்பு எந்தளவிற்கு பலனைத் தரபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.