சினிமா

டாக்கு மஹாராஜ் திரைப்பட வெற்றி.. தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா

'டாக்கு மஹாராஜ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தமனுக்கு நடிகர் பாலகிருஷ்ணா கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

டாக்கு மஹாராஜ் திரைப்பட வெற்றி.. தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா
தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா

முன்னணி இசையமைப்பாளரான தமன் 'சிந்தனை செய்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடந்து, 'ஈரம்', 'தில்லாலங்கடி', 'முன்தினம் பார்த்தேனே', 'மம்பட்டியான்', 'ஒஸ்தி', 'வாலு', 'காஞ்சனா 2', 'ஈஸ்வரன்', 'வாரிசு', 'கேம் சேஞ்சர்' என்று பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இசையமைப்பாளர் தமன் இசையில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் வெளியான 'ஆல வைகுண்ட புரமுலோ' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது தமனுக்கு வழங்கப்பட்டது.

தற்போது  இவரது இசையில் ’சப்தம்’, ’தெலுசு கதா’, ’தி ராஜா சாப்’, ’ஜாட்’, ’ஓஜி’, ’அகாண்டா 2’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இசையமைப்பாளர் தமன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் தமன் இசையமைப்பதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2003-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், ஜெனிலியா நடிப்பில் வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

இந்நிலையில், ‘டாகு மகாராஜ்’ வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தமனுக்கு நடிகர்  பாலகிருஷ்ணா Porsche கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதாவது, இயக்குநர் பாபி கோலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘டாக்கு மஹாராஜ்’ திரைப்படத்திற்கும் தமன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.  

நாக வம்சி தயாரித்திருந்த இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இசையமைப்பாளர் தமனுக்கு நடிகர்  பாலகிருஷ்ணா Porsche கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து நடிகர் சூர்யாவிற்கு, நடிகர் கமல்ஹாசன் ‘ரோலக்ஸ்’ வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கினார். இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு காரும், உதயவி இயக்குநர்களுக்கு இரு சக்கர வாகனங்களும் பரிசாக வழங்கினார். கமல்ஹாசன் மட்டுமல்லாமல் பல இயக்குநர்களும் தங்கள் பட ஹீரோ, ஹீரோயின் மற்றும் உடன் பணிபுரிபவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.