அரசியல்

TVK Vijay: “அதுவே முடியல... ஆனா நேரடியா முதலமைச்சர் போஸ்ட்..” தவெக தலைவர் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!

தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியலில் தடம் பதிக்கவுள்ள விஜய்க்கு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

TVK Vijay: “அதுவே முடியல... ஆனா நேரடியா முதலமைச்சர் போஸ்ட்..” தவெக தலைவர் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!
தவெக தலைவர் விஜய்யை சீண்டிய வேல்முருகன்

திருச்சி: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தடம் பதிக்கவுள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள அவர், அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார். தவெக-வின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில், தன் சொந்தக் கட்சியின் மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்விற்கு கூட செல்லாத விஜய், நேரடியாக முதலமைச்சராக வேண்டும் என நினைக்கிறார். அவருக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் தெரிவித்துள்ளார். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தற்பொழுது அதிக மழை பெய்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருக்க வேண்டும். மேலும், மழை அதிகம் பெய்யாத போதே தமிழகத்தில் 5 உயிர்கள் பலியாகி உள்ளன. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதனால் சம்மந்தப்பட்ட துறைகள் சரியாக செயல்படவில்லையோ எனத் தோன்றுகிறது. இதற்கு துறை செயலாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அதேபோல், தமிழக சிறைகளில் கடந்த மூன்றாண்டுகளில், நூறு கைதிகள் பலியாகி உள்ளனர். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், எவ்வளவு பெரிய குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தான் தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனக் கூறினார். மேலும், அவர்களை என்கவுண்டர் செய்யக் கூடாது, காவல்துறையே நீதிபதிகளாக மாறக் கூடாது. ஈவு இரக்கமற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மை தான், ஆனால் அது சட்டத்தின் துணை கொண்டு தான் இருக்க வேண்டும் என்றார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் உரிய சமூக நீதி சமமாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஒன்றிய அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசு தப்பித்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாதிவாரி கண்க்கெடுப்பை மாநில அரசுகளைக் நடத்த எந்த தடையும் இல்லை. ஒன்றிய அரசு பதவி இடங்களில் இந்திக்காரர்கள் திணிக்கப்படுகிறார்கள். ஒன்றிய அரசின் பணிகளில் 90 சதவீதம் மாநில மக்களுக்கு தான் பணி வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்திக்காரர்களை முழுவதுமாக புகுத்துவது ஜனநாயக படுகொலை. தமிழகத்தின் உரிமை மறுக்கப்படும் போது தமிழக அரசு மெளனமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

அதேபோல், செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு துணை தலைவராக மருத்துவர் சுதா சேசன் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், அந்தப் பதவியில் ஒரு மருத்துவரை நியமிப்பது, தமிழகத்தில் உள்ள தமிழ் அறிஞர்களை அவமதிப்பது போன்று தான் எனக் கூறினார். மேலும், மாட்டுத் தொழுவத்தில் படுத்தால் புற்றுநோய் சரியாகிவிடும் என ஒன்றிய அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார் இவர்களைப் போன்ற அறிவாளிகளை வைத்து தான் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். இதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை பேசும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார்.

அணு கனிம சுரங்கத் திட்டம் கன்னியாகுமரியில் நிறுவ ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதை தமிழக அனுமதிக்க கூடாது. சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு நிற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை வெளி நாடு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நீட் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகள் தொடர்ந்து அவமதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர் அவ்வாறு தமிழகத்தில் அடுத்த முறையும் நடைபெற்றால் நீட் செண்டர்களை அடித்து நொறுக்குவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் இதற்கு முன்பு பல நடிகர்கள் கட்சி தொடங்கிவிட்டனர் அவர்கள் கட்சிகள் என்ன ஆனது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சியை குறித்து பொருத்துவது தான் பார்க்க வேண்டும். விஜய் நேரடியாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல நினைக்கிறார். மக்கள் பிரச்சினை குறித்து விஜய்யின் கருத்து என்னவென்று அவரிடம் கேட்க வேண்டும். அதற்கு விஜய் தடங்கல் இல்லாமல் பதில் சொல்லட்டும். ஹைட்ரோ கார்பன் மீத்தேன் குறித்து விஜய்யின் கருத்து என்ன? முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து விஜய்யின் கருத்து என்ன? மதுவிலக்கு குறித்து விஜயின் கருத்து என்ன? என கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்று நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு விஜய்யின் கருத்து என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். களத்திற்கு வந்து பத்தாண்டுகள் பணியாற்றி விட்டு அதன் பின் தனக்கு முதலமைச்சராக வாய்ப்பு கொடுங்கள் என கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இதை எதையும் நான் செய்யமாட்டேன், சொந்தக் கட்சியின் மாநாட்டிற்கு கூட பந்தக்கால் வைக்கும் நிகழ்ச்சிக்கு கூட வரமாட்டேன். நேரடியாக முதலமைச்சர் அரியணைக்கு தான் வருவேன் என கூறினால் தமிழக மக்கள் தான் எஜமானர்கள்; அதற்குரிய பதிலை அவர்கள் தேர்தலில் அளிப்பார்கள் என்றார்.