த.வெ.க முதல் பொதுக்குழு கூட்டம்.. திமுக அரசை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக-வுக்காக வேலை செய்வதாக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா திமுக மற்றும் பாஜக-வை கடுமையாக சாடினார். விஜய் Work at Home அரசியல் செய்கிறார் என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், திமுக அரசை தூக்கியெறியவும், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தவும் விஜய் பணியாற்றி வருகிறார் என்றார். ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்ததும் த.வெ.க. தலைவர் விஜய் தனது ஒவ்வொரு நொடியையும் மக்களுக்காக செலவிடுவார் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். 70 ஆண்டுகள் கட்சி நடத்தும் திமுக-வினர் தேர்தல் வியூகங்களை வகுக்கவும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கவும் மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, அந்த நிறுவனங்கள் பாஜக தலைவர் அண்ணாமலையையே செட் செய்து விட்டதாக கூறினார்.
ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பதை விட்டு விஜய் அரசியலுக்கு வருவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் திரைப்பட நிறுவனம் மூலம் பணம் சம்பாதிப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா சாடினார். எம்.ஜி.ஆர்.-ஐ இழிவு செய்த திமுக அவர் இறக்கும் வரை Work at Home-ல் இருந்ததாகவும் தற்போது திமுக அமைச்சரவைக்கு ஓய்வு கொடுக்க விஜய் வேலை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 2026-ல் இளைஞர்கள் முடிவெடுத்து த.வெ.க.-வை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி இல்லை என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, திமுக சாதியை வைத்து அரசியல் செய்வது தனக்கு தெரியும் என்றார். மக்களுக்கான உண்மையான போராட்டத்தை இரண்டு மாதங்களில் விஜய் காட்டுவார் என்றும் ஆதவ் அர்ஜுனா கூறினார். இந்தியா கூட்டணியின் மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் நடத்தியது. ஆனால் ஒரு கூட்டத்தைக் கூட திமுக நடத்தவில்லை. கூட்டணி கட்சிகளிடம் திமுக அடக்குமுறையை கையாள்வதாகவும், மக்கள் பிரச்சனைகளுக்காக திமுக கூட்டணி கட்சிகள் போராடவில்லை என்றால் அது பாஜக-வின் வளர்ச்சிக்குத் தான் உதவும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
What's Your Reaction?






