திகார் ஜெயில் டூ நாடாளுமன்றம்..ஒருநாள் செலவு இவ்வளவா? அதிர வைத்த காஷ்மீர் எம்பி

தனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்காக, கண்டிப்பாக நாடாளுமன்றம் சென்றே தீருவேன் என அடம்பிடித்து அசர வைத்துள்ளார் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்பியான இன்ஜினியர் ரஷீத். ஏன் இப்படி அடம்பிடிக்க வேண்டும்? அப்படி என்ன பஞ்சாயத்து? என்பதனை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Mar 28, 2025 - 14:45
Mar 28, 2025 - 14:49
 0
திகார் ஜெயில் டூ நாடாளுமன்றம்..ஒருநாள் செலவு இவ்வளவா? அதிர வைத்த காஷ்மீர் எம்பி
காஷ்மீர் எம்பி-திகார் ஜெயில் டூ நாடாளுமன்றம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் அப்துல் ரஷீத் ஷேக் என்ற இன்ஜினியர் ரஷீத். இரண்டும் முறை காஷ்மீர் எம்எல்ஏ-வாக வெற்றிப் பெற்ற ரஷீத், 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக நிதி கொடுத்ததாக கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே 2024 நாடளுமன்றத் தேர்தலை சந்தித்த ரஷீத், பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்டு அபாரமாக வெற்றிப் பெற்றார். இந்நிலையில், இப்போது வரையிலும் திஹார் சிறையே கதி என இருக்கும் எம்.பி ரஷீத், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

இதனையடுத்து ஏப்ரல் 4 ஆம் தேதி வரை, போலீஸார் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் சென்று வர எம்பி ரஷீத்துக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம். ஆனால், அதில் தான் பெரும் சிக்கல் இருந்தது. அதன்படி, தினமும் திஹார் சிறையில் இருந்தே நாடாளுமன்றம் சென்றுவர வேண்டும் என எம்பி ரஷீத்துக்கு அனுமதி கிடைத்தது. இதனால் திஹார் சிறை நிர்வாகத்தில் இருந்து, எம்பி ரஷீத்தை தினமும் நாடாளுமன்றம் கூட்டிச் சென்றுவிட்டு மீண்டும் அழைத்து வர, நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவாகும் என தெரிவித்தது. இந்த கணக்கின் படி, 6 நாட்களுக்கு மொத்தம் 8 லட்சத்து 74 ஆயிரம் செலவாகும் என பக்காவாக பில் போட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பியது.

ஏன் இவ்வளவு செலவு? 

ரஷீத்துக்கு பாதுகாப்பு வழங்க, ஒரு அசிஸ்டெண்ட் கமிஷ்னர் தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 பேர் தேவை என்றும், அவர்கள் இரண்டு ஷிப்ட்களாக வேலை பார்ப்பார்கள் எனவும் திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இவர்களுக்கான ஊதியம் போக, மற்ற செலவுகளையும் சேர்த்து 8 லட்சத்து 74 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என கூறியது. இதனை பார்த்து தலைசுற்றிப் போன எம்பி ரஷீத், இவ்வளவு பெரிய தொகையை தன்னால் ஏற்பாடு செய்ய முடியாது என மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க, தனக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அப்போது இதுபோன்ற சிக்கல்கள் இல்லை என கோரிக்கை வைத்தார். 

அதேநேரம், தனது நண்பர்கள் உட்பட தெரிந்தவர்கள் மூலம் முடிந்த அளவு பணத்தை திரட்டிய ரஷீத், அதனை திஹார் சிறை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார். இதனையடுத்து ரஷீத் நாடாளுமன்றம் சென்றுவரலாம் என, நீதிபதிகள் சந்த்ரா தாரி சிங், அனுப் பம்பானி அமர்வு அனுமதி வழங்கியது. எம்பி என்ற முறையில், தனது தொகுதி மக்களுக்காக ரஷீத் நாடாளுமன்றம் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலில், தற்போதைய காஷ்மீர் முதலமைச்சராக உள்ள ஒமர் அப்துல்லாவை எதிர்த்துப் போட்டியிட்ட ரஷீத், 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow