இரட்டை இலை சின்னம் முடங்குமா? இபிஎஸ்-க்கு அடுத்த நெருக்கடி... வெடிக்கும் அதிமுக உட்கட்சி விவகாரம்
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் இயக்கமான அதிமுக, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. ஜெயலலிதாவுக்குப் பின், முதலமைச்சர் பதவி ஓபிஎஸ்-ஐ தேடிச் சென்றது. ஆனால், அம்மா நினைவிடத்தில் ஓபிஎஸ் நடத்திய தியானம், அவரை மட்டும் அல்லாமல், அதிமுகவையும் தலைகீழாக மாற்றியது. இந்த கலவரத்தில் யாருமே எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். அதோடு 4 ஆண்டுகள் வரை ஆட்சியை தக்கவைத்த அவர், ஓபிஎஸ், சசிகலா தரப்பையும் அப்படியே ஓரங்கட்டி, இப்போது கட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் எடப்பாடிக்கு, 2026 தேர்தல் பெரும் சவலாக இருக்கப் போகிறது. கூட்டணியை எப்படி கட்டமைப்பது, எந்தெந்த கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வருவது என தேர்தல் வியூகம் அமைப்பதில் சக்கரமாக சுழன்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே, கட்சியில் தனக்கு எதிராக இருக்கும் அதிருப்திகளை சமாளித்து வரும் இபிஎஸ், இப்போது மரண கிணறு சாகசத்துக்கு நிகரான நெருக்கடியில் சிக்கியுள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து, தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தான், இபிஎஸ் தரப்பினரை ஆட்டம் காண வைத்துள்ளது.
முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகளான புகழேந்தி, கே.சி. பழனிச்சாமி உள்ளிட்டோர், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தனர். இவர்களின் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடியார் உறுதியாக இருந்தார். அதன்படி, தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்கும் முன்பே, அதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஒருவர், உட்கட்சி விவகாரம் குறித்து முறையிட முடியாது என்றும், 2022ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை, சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாகவும் கூறி, தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை வாங்கினார்.
ஆனால் இதனை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி. யுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் கிடையாது என்று இ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், கட்சியில் எந்த பிளவும் இல்லை, தனக்கு இருந்த ஆதரவு அப்படியே நீடிக்கிறது, அதில் எந்த மாற்றமும் இல்லை என பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தலையிட்டு இரட்டை இலை சின்னத்தை முடக்கினால், அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிடும் என இ.பி.எஸ். தனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருந்தார்.
இறுதியாக, உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால், தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால், விடாது கருப்புவாக இந்த வழக்கை பின்தொடர்ந்த ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி பழனிசாமி ஆகியோர், தங்கள் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கும் முன்பே, தேர்தல் ஆணைய விசாரணையை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தாக்கல் செய்துள்ளார். இன்னொரு பக்கம் பெரும்பாலான அதிமுக உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். அதனால் இது சம்பந்தமாக விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என இபிஎஸ்-க்கு செக் வைத்தனர்.
அதேபோல், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது எனவும், இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது குறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு, இரட்டை இலை சின்னம் தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தனது விசாரணையை தொடங்கினால், இபிஎஸ்ஸின் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்டு வைக்கப்படலாம் என்பதோடு, இரட்டை இலை சின்னமும் முடக்கப்படும் அபாயம் உள்ளதாக எதிர் தரப்பினர் கூறுகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில், இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என ஒருங்கிணைந்த அதிமுகவை கட்டமைத்து, அவர்களுடன் கூட்டணி வைப்பதே பாஜகவின் அரசியல் கணக்கு என்றும், ஆனால், இதற்கு இபிஎஸ் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை என்பதால், அவருக்கு சரியான நேரத்தில் பாஜக செக்மேட் வைத்துள்ளது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
ஒருபக்கம் செங்கோட்டையனின் அதிருப்தி, கட்சியின் கீழ்மட்டத்தில் நிலவும் அதிகார மோதல் என பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ள பழனிசாமி தற்போது தேர்தல் ஆணையம் மூலம் வரும் நெருக்கடியை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தான், பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
கட்சியை தன்வசப்படுத்தியது, சசிகலா, ஓபிஎஸ் தரப்பை ஓரங்கட்டியது, கூட்டணியில் இருந்து பாஜக-வை கழட்டிவிட்டது என பல்வேறு காய்களை சரியாக நகர்த்திய பழனிசாமி இந்த யுத்தத்திலும் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....
What's Your Reaction?






