அரசியல்

உதயநிதி எல்லாம் துணை முதல்வர்.. துரை முருகனுக்கு ஏக்கம்.. ஆர்.பி.உதயகுமார் கருத்து!

வான்வெளி சாகாச நிகழ்ச்சியில் முதலமைச்சர் அணிந்திருந்த கண்ணாடி விமானத்தை மட்டும் பார்க்க முடியுமா? மக்களை பார்க்க முடியாதா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

உதயநிதி எல்லாம் துணை முதல்வர்.. துரை முருகனுக்கு ஏக்கம்.. ஆர்.பி.உதயகுமார் கருத்து!
துரை முருகனுக்கு ஏக்கம்.. ஆர்.பி.உதயகுமார் கருத்து!

மதுரை புறநகர் மேற்கு சோழவந்தானில் ஜெகை மாரியம்மன் கோயில் முன்பு சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர்  திமுக அரசை கண்டித்து  மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், “சொத்து வரியை ஏற்கனவே 150 சதவீதம் உயர்த்தி விட்டார்கள். இது பத்தாது என்று தற்போது மேலும் ஆறு சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள். இப்படியே உயர்த்தினால் யாருமே சொத்து வாங்க முடியாது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மட்டும்தான் சொத்து வாங்க முடியும். அது ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான். மற்றவர்கள் வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது. இது மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக உள்ளது. அதேபோல் சட்ட ஒழுங்கு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.

இன்றைக்கு முல்லை பெரியார், காவிரி குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அக்கறை இல்லை. ஏனென்றால் தனது மகன் வயது ஸ்டாலின் முதலமைச்சராகிவிட்டார், டவுசர் போட்டுக் கொண்டிருந்த உதயநிதி இன்று துணை முதல்வர் ஆகிவிட்டார். நம்மால் இந்த பதவியில் இருந்து போக முடியவில்லை என்ற ஏக்கம் துரைமுருகனுக்கு உள்ளது. இன்றைக்கு மடிக்கணினி வழங்கவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படவில்லை. இ.ப்படி மக்கள் சேவையில் திமுக பூஜ்ஜியமாக உள்ளது. ஆனால் அதை மறைக்கும் வகையில் விளம்பரத்தின் மூலம் ராஜ்ஜியமாக உள்ளது.

 ஏற்கனவே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மதுரையில் உதயநிதி பட்டா கொடுக்கும் நிகழ்ச்சி முதலில் நடைபெற்றது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பங்கேற்றார். தற்பொழுது பட்டா கிடைக்கவில்லை என்று 5,000 பேரை திரட்டி ஊர்வலமாக சென்று மனு கொடுத்தார். திமுக ஆட்சியில் கேட்டால் கிடைக்காது, ஆனால் கேட்காமல் கொடுக்கும் ஒரே அரசு அதிமுக அரசாகும்.

சென்னையில் வான்வழி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மக்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி ,கழிப்பறை வசதி உள்ளிட்ட எதையும் சரி செய்யவில்லை. இதில் 5 பேர் இறந்து போய் உள்ளார்கள். முதலமைச்சரும் அவரது மனைவியும் கூலிங் கிளாஸ் அணிந்தார்கள். முதலமைச்சர் அணிந்த கூலிங் கிளாசில் விமானம் மட்டும்தான் தெரியுமாம்! மக்கள் கண்ணுக்கு தெரியமாட்டார்களாம்! ஒரு பாட்டில் தண்ணீர் இருந்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று உயிரிழந்த உறவினர்கள் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளனர்.  தொடர்ந்து மக்கள் மீது மெத்தன போக்கு கடைப்பிடித்து வரும் இந்த திமுக அரசுக்கு சரியான பாடத்தை நீங்கள் புகட்ட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.