விழுப்புரம்: கோலிவுட் மாஸ் ஹீரோவான விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தடம் பாதிக்கவுள்ளார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், தற்போது மாநாடு வேலைகளில் பிஸியாகிவிட்டார். கடந்த மாதம் தவெக கொடியை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக கடந்த மாதமே தவெக மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தார் விஜய். ஆனால், பாதுகாப்பு காரணங்களால் தவெக மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், மீண்டும் உரிய விளக்கங்களுடன் மாநாட்டுக்கு அனுமதி வாங்கியது தமிழக வெற்றிக் கழகம். இதனையடுத்து தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில் தலைவர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். அதேநேரம் தவெக மாநாடு குறித்து தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது.
தவெக நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மாநாட்டுக்கு மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தவெக மாநாடு நடைபெறும் இடத்தை, விழுப்புரம் மாவட்ட சரக காவல் துணைத் தலைவர் திரிஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாட்ச் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். மாநாட்டில் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படாமல் இருக்க தென்மாவட்ட பகுதியான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி என பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை, விழுப்புரத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம் பகுதி வழியாக சென்னைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் தடையின்றி செல்லவும், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் பேரிகார்ட் அமைப்பது குறித்தும் இந்த ஆய்வின் போது அதிகாரிகள் ஆலோசித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செஞ்சி நான்கு முனை சந்திப்பிலும் விழுப்புரம் மாவட்ட சரக காவல் துணைத் தலைவர் திஷா மித்தல் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளுக்கு மத்தியில் தவெக மாநாட்டுக்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.