Panimaya Matha Temple : பனிமய மாதா ஆலய 442வது ஆண்டு திருவிழா .. மக்கள் வெள்ளத்தில் பவனி வந்த மாதா சப்பரம்

Tuticorin Panimaya Matha Temple Festival 2024 : தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயத்தின் 442வது ஆண்டு திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

Aug 6, 2024 - 13:55
Aug 6, 2024 - 17:50
 0
Panimaya Matha Temple : பனிமய மாதா ஆலய 442வது ஆண்டு திருவிழா .. மக்கள் வெள்ளத்தில் பவனி வந்த மாதா சப்பரம்
Tuticorin Panimaya Matha Temple Festival 2024

Tuticorin Panimaya Matha Temple Festival 2024 : ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக தூத்துக்குடியில் எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும், திருமந்திர நகர் பனிமய மாதாவின் ஆலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இலங்கை, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பது வழக்கம். 

பனிமய மாதா(Panimaya Matha Temple Festival) ஆலய 442வது ஆண்டு திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் மிகக் கோலாகலமாகத் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுவது வழக்கம்.  

இந்நிலையில் இத்திருவிழாவின் 10ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு முதல் திருப்பலியும், 5:30 மணிக்கு 2ம் திருப்பலியும், 7:30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பேராலய பங்குத் தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையிலும், 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக திருப்பலி நடைபெற்றது. 

இதையடுத்து தூத்துக்குடியின் அனைத்து மண்ணின் மைந்தர் குருக்கள் துறவியர், அருட் சகோதர சகோதரிகளுக்காக நண்பகல் 12 மணிக்கு நிறப்பு நன்றித் திருப்பலி நடைபெற்றது. இதன் பின்பு மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெற்றது. இதைனையடுத்து இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய மாதா அன்னை எழுந்தருளி மாநகர வீதிகள் வழியாக உலா வந்தார். இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் குவிந்தனர். இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக சுமார் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இத்திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாதாவின் ஆசிகளைப் பெற்றனர். 

மேலும் படிக்க: தீராத நோய் தீர்க்கும் தோரணமலை முருகன்

திருவிழா ஏற்பாடுகளை ஆயர் பிஷப் ஸ்டீபன் தலைமையில், திருத்தலப் பேராலய அருள்பணியாளர்கள், அருள்தந்தை ஆலய அதிபர் ஸ்டார்வின்,  உதவி பங்குத்தந்தை பாலன், களப் பணியாளர் தினகரன், அடைக்கல அன்னை, அமலவை அருட்சகோதரிகள், சவேரியானா இயேசு சபையினர், லசால் அருட்சகோதரர்கள், பேராலய மேய்ப்புப் பணிக்குழுவினர், பக்த சபையினர், இறைமக்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow