Thoranamalai : தீராத நோய் தீர்க்கும் தோரணமலை முருகன்.. கையெடுத்து கும்பிட்டால் சொத்துத்தகராறு நீங்கும்

Thoranamalai Murugan Temple in Tenkasi District : தோரணமலை முருகனை வணங்கினாலே சந்தோஷத்தைத் தவிர பிற எந்த தோஷமும் நெருங்காது என்பது பக்தர்களின் நீங்காத நம்பிக்கை. எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை தோரணமலையில் நீங்கள் பெற முடியும்.

Aug 6, 2024 - 05:30
Aug 6, 2024 - 11:50
 0
Thoranamalai : தீராத நோய் தீர்க்கும் தோரணமலை முருகன்.. கையெடுத்து கும்பிட்டால்  சொத்துத்தகராறு நீங்கும்
Thoranamalai Murugan Temple in Tenkasi District

Thoranamalai Murugan Temple in Tenkasi District : முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் எத்தனையோ மலைதலங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். பழனி, மருதமலை, திருத்தணி பழமுதிர்ச்சோலை என்று முருகன் வீற்றிருக்கிறார். தோரணமலை முருகன் தனித்துவம் மிக்கவர். திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர்.  
செவ்வாய்கிழமையான இன்றைய தினம் தோரண மலை முருகப்பெருமானின் அருளாசியை பெறுவோம். 

“தோரணமலை”(Thoranamalai) முருகன் தனித்துவம் கொண்ட ஆலயம். தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து பார்க்கும் தேரையர் சித்தர் இருவரும் பல நூறு ஆண்டுகளாக வழிபட்ட பெருமையும், மகிமையும் கொண்டது.

உலகத்தை சமப்படுத்த தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்கு செல் என்று சிவபெருமான், அகத்தியருக்கு உத்தரவிட்டு, அவர் வந்த கதை உங்களுக்கு தெரிந்ததுதான். அகத்திய முனிவர் பொதிகைக்கு வந்து கொண்டிருந்தபோது கடையம் அருகே உள்ள தோரணமலையை பார்த்து வியந்தார். எனவே அந்த மலையில் சிறிது காலம் தூங்கி செல்லலாம் என்று அகத்தியர் மலை உச்சிக்கு சென்றார்.

தோரணமலையில் பச்சை பசேவென விளைந்து கிடந்த சுமார் 4 ஆயிரம் மூலிகை செடி வகைகளை பார்த்ததும் அகத்தியர் மேலும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த மூலிகைகள் என்னென்ன நோய் தீர்க்கும் என்பதை கண்டுபிடித்தார். அந்த தகவல்களை எல்லாம் அவர் குறிப்புகளாக எழுதினார். அவைதான் இன்று அகத்தியர் மருத்துவ நூல்களாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.

ஆக அகத்தியரின் மருத்துவ ஆய்வுக்கு வித்திடப்பட்ட இடம் இந்த தோரணமலை என்பது குறிப்பிடத்தக்கது.அகத்தியரின் சீடராக வந்து சேர்ந்த தேரையரும் மருத்துவத்தில் நிறைய புதுமைகளை செய்தார். அவர்கள் இருவராலும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோரணமலை மிக மிகப்பெரும் மருத்துவ தொழிற்சாலை போல செயல்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார். அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார்.

தோரணமலைக்கு வேறொரு தனிச்சிறப்பும் இருக்கிறது. இந்த மலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி, மலையின் வடபுறத்தில் ஜம்பு நதி பாய்கிறது. இந்த இரண்டு நதிகளுக்கும் இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். நீங்கள் என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் சரி... தொழில் விருத்தி ஆகவேண்டுமா? குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளா? கடன் தொல்லையா? நல்ல வேலை வேண்டுமா?  பதவி உயர்வு வேண்டுமா? திருமணம் நடக்க வேண்டுமா? புத்திரப் பாக்கியம் வேண்டுமா? இப்படி நீங்கள் என்ன கேட்டாலும் தோரணையாக வாழ தோரண மலை முருகன் வாரி வழங்குவார். 

திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.

தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அரூப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மலையின் அடிவாரத்தில் சப்த கன்னிகையர் கோவில், மலையின் பின்புறம் சாஸ்தா கோவில், மலை உச்சியில் முருகன் கோவில் என ஆன்மீகப்பிரியர்களுக்கு தோரணமலை மன நிம்மதியை கொடுக்கும் இடமாக திகழ்வதாக பக்தர்கள் சொல்கின்றனர். மலை மேலே ஏறி செல்ல முடியாதவர்களுக்காக, மலையடிவாரத்திலும் முருகப் பெருமானுக்கு ஓர் ஆலயம் இருக்கிறது.

மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது. எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும். தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது.  மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல்  மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். தோரணமலை முருகன் பற்றிய கூடுதல் தகவல்களை செண்பகராமனிடம் 9965762002 என்ற எண்ணில் பெறலாம்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow