TN Budget 2025: மூன்றாம் பாலினத்தவர்களுக்காக விரிவுப்படுத்தப்படும் திட்டங்கள்.. அரசின் முக்கிய அறிவிப்பு
மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்:
- முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், கலைஞரால், தருமபுரி மாவட்டத்தில் தொலைநோக்குடன் விதைக்கப்பட்ட சுய உதவிக் குழு திட்டம், இன்று நாடெங்கும் கோடிக்கணக்கான மகளிரின் வாழ்வை மேம்படுத்திடும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. மகளிரிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி, சமூகத்தில் பெண்களுக்கு உரிய இடத்தினை உறுதிசெய்திடும் நோக்கில், அவர்களின் வளர்ச்சிக்கும், திறன் மேம்பாட்டிற்கும் தேவையான நலத் திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
- தற்போது, 4.76 லட்சம் மகளிர் திட்ட சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. சுயஉதவிக் குழு இயக்கத்தில் இதுவரை இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு, 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், வரும் நிதியாண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு 37,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் முத்திரை பதிக்கும் திட்டங்களில் ஒன்றான 'தோழி' பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஏற்கெனவே தாம்பரம், திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் 1,303 மகளிர் பயன்பெறும் வகையில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. எதிர்வரும் நிதியாண்டில், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திடும் நோக்கத்துடன், நாட்டிற்கே வழிகாட்டும் வகையில், மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது.
- மூன்றாம் பாலினத்தவரின் நல்வாழ்விற்கென, முன்னோடியாக பல்வேறு புதுமையான திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதிசெய்து வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் உயர்கல்வி கற்பது இன்றியமையாததாகும். எனவே, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
What's Your Reaction?






