மாற்றுத் திறனாளிகளுக்கு இப்படி ஒரு ஆஃபரா..? பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக பட்ஜெட்டில் அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புக்கு வழிவகுத்தல், ஆறு வகையான மறுவாழ்வு சிகிச்சைகள், ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலன்
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சமூகப் பாதுகாப்பு அளித்தல், சிறப்புக் கல்வி, தொழிற்பயிற்சி அளித்தல், சுயவேலைவாய்ப்பு அளித்தல், உதவி உபகரணங்கள் வழங்குதல், தடையற்ற சூழல் அமைத்தல் மற்றும் சிறப்புப் பள்ளிகள், இல்லங்கள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 4 சதவீத இடஒதுக்கீடு மூலம், கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 1,493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியைப் பெற்றுள்ளனர். அதே போன்று மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்துவதை தனியார் துறைகளிலும் ஊக்குவிக்கும் பொருட்டு தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தி இருந்தால். அத்தகைய நிறுவனங்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஊதிய மானியத்தினை ஒரு ஆண்டிற்கு அரசு வழங்கும்.
உலக வங்கியின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் உரிமைத் திட்டத்தின் (RIGHTS) மூலம் 2024-25 ஆம் நிதியாண்டில் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக 10 வருவாய்க் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும், 38 வட்டார அளவிலான சேவை மையங்களும் தொடங்கப் பெற்று மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், ஆறு வகையான மறுவாழ்வு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டில், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அனைத்து மாவட்டங்களிலும் 82 வருவாய்க் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும் 400 வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும் ஏற்படுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகள் தற்சார்புடன் இயல்புநிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில், உயர் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட திறன்மிகு கண்ணாடிகள் (Smart Vision Glasses), அறிவுசார் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கற்பிக்கும் உபகரணப் பெட்டகம் (TLM Kit), நிற்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கும் திட்டம் 125 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
இத்திட்டம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேலும் செம்மைப்படுத்தும். மாநிலத்திலுள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் தக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும்.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமன்றி, அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகவும் திகழ்வார்கள். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?






