இயற்கை வேளாண்மைக்கு கோடிகளை ஒதுக்கிய அரசு... வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுதானிய இயக்கமானது, உழவர் குழுக்கள் அமைத்தல், பயிர் சாகுபடி மத்திய , மாநில நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

Mar 15, 2025 - 11:30
Mar 15, 2025 - 12:20
 0
இயற்கை வேளாண்மைக்கு கோடிகளை ஒதுக்கிய அரசு... வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு

இயற்கை வேளாண்மையைப்பரவலாக்கம் செய்திடும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மொத்தம் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2025-2026ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் பட்ஜெட்டை தொடர்ந்து அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பச்சை துண்டோடு சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளனர்.
வேளாண் துறையுடன் கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறைக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்

தொடர்ந்து பேசிய வரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மானாவாரியிலும் அதிக மகசூல் தந்து, உழவர்களுக்குப் போதிய வருமானம் கிடைக்கச் செய்வதில், மக்காச்சோளப் பயிர் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் மக்காச்சோளம் 10 இலட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 28 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச்சோளச் சாகுபடி மூலம். உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கச்செய்யும் வகையில், மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் ஒரு இலட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில், 40 கோடியே 27 இலட்சம் ரூபாய் ஒன்றிய,மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
எண்ணெய்வித்துகள் இயக்கம்
தமிழ்நாட்டில் நிலக்கடலை, எள். சூரியகாந்தி. ஆமணக்கு போன்ற பிரதான எண்ணெய்வித்துப் பயிர்கள் சராசரியாக 10 இலட்சத்து நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உணவுஎண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடையும் வகையில்,நிலக்கடலை, எள். சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களின் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு,  எண்ணெய்வித்துகள் இயக்கம் 2025-26 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து 16 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சுமார் 90 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் 108 கோடியே 6 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்


தமிழ்நாடு சிறுதானிய இயக்கமானது, தமிழ்நாடு அரசால், 2023-24 ஆம் ஆண்டு முதல் 2027-28 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுத் திட்டமாக அறிவிக்கப்பட்டு. வேளாண்மை சார்ந்த அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. உழவர் குழுக்கள் அமைத்தல், பயிர் சாகுபடி மத்திய , மாநில நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இயற்கை வேளாண்மைக்கான திட்டங்கள்

இயற்கை வேளாண்மையில், இரசாயனக் கலப்பு இல்லாத. சுற்றுச்சூழலுக்கு உகந்த, வயல்களில் கிடைக்கக்கூடிய வளங்களான பயிர்கள், கால்நடைகள் மற்றும் மரங்கள் ஆகியவற்றின் கழிவுகளை மறுசுழற்சி செய்து ஒருங்கிணைத்து விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை வேளாண்மையைப்பரவலாக்கம் செய்திடும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மொத்தம் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஒருங்கிணைத்து, குழுக்கள் அமைத்து 7,500 உழவர்கள் பயனடையும் வகையில் இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் இரண்டாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

கண்டுணர் சுற்றுலா

இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறைகளில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளைபொருட்கள் எளிதில் நுகர்வோருக்குக் கிடைக்கச்செய்யும் வகையில், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் பொருட்களை பூமாலை வணிகவளாகம் உள்ளிட்ட அரசுக் கட்டடங்களில் சந்தைப்படுத்த, உரிய வசதிகள் செய்து தரப்படும்.
உழவர்களிடையே உயிர்ம வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கம் செய்திட, 37 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த, 38,600 மாணவர்கள் உயிர்ம வேளாண் பண்ணைகளுக்குக் "கண்டுணர் சுற்றுலா" அழைத்துச் செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

உயிர்ம வேளாண் முறையில் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு வேளாண் விளைபொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி, ஏற்றுமதி செய்ய, எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு, முழு மானியம் வழங்கப்படும். உயிர்ம வேளாண் நிலையை அடைந்த உழவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், உயிர்ம வேளாண்மை சான்றிதழ் பெற, உழவர்கள் பதிவு செய்வதற்கான கட்டணத்திற்கு முழு விலக்கு அளித்து, இலவசமாகப் பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow