தொடர் கனமழை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு.. மற்ற அணைகளின் நிலவரம் எப்படி?
தமிழ்நாட்டின் பிரதான அணையான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,577 கன அடியிலிருந்து 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 44.62 அடியில் இருந்து 46.80 அடியாக உயர்ந்துள்ளது.

சேலம்: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிகமான கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஊட்டி, கோத்தகிரி உள்பட பல்வேறு நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது.
கூடலூர் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முதுமலை தெப்பக்காடு பகுதியில் உள்ள தரை பாலத்திற்கு மேல் வெள்ளம் பாய்கிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தை அதிக கன மழை புரட்டிப்போட்டு வருவதால், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்கள் அங்கு முகாமிட்டுள்ளன. ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் முகாமிட்டுள்ள அவர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூா், குடகு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை அதிகரித்துள்ளதால் அங்குள்ள கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்து அங்கு இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுவதால் நேற்று மாலை நிலவரப்படி காவிரி ஆற்றில் விநாடிக்கு 19,000 கனஅடி நீர் அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஐந்தருவி, பெரியபாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் பிரதான அணையான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,577 கன அடியிலிருந்து 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 44.62 அடியில் இருந்து 46.80 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்இருப்பு 15.85 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கேரள மலைப்பகுதி மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையிலும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 20,092 கன அடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 74.48 அடியாக உள்ளது. இதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97அடியை எட்டியுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் பிரதான அணையாக விளங்கும் பாபநாசம், மணிமுத்தாறு, வைகை அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
What's Your Reaction?






