'தோனி, கோலி என்னை இந்திய அணியில் ஓரம் கட்டினார்கள்'.. அமித் மிஸ்ரா வேதனை.. உருக்கமான பேச்சு!
Former Cricketer Amit Mishra : தோனி தலைமையில் மட்டுமின்றி தனது நெருங்கிய நண்பரான விராட் கோலி தலைமையிலும் தான் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டதாக அமித் மிஸ்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா(Former Cricketer Amit Mishra). 41 வயதான இவர் இப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து மனம்திறந்து பேசியது சமுகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக உள்ளது.
அதாவது தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டபோதிலும் அணியில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் அமித் மிஸ்ரா தற்போது புலம்பி தீர்த்துள்ளார். இது தொடர்பாக யூடியூப் ஒன்றுக்கு பேட்டியளித்த அமித் மிஸ்ரா, ''2010ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தியதுடன் 50 ரன்களும் அடித்தேன்.
ஆனால் அடுத்த போட்டியில் என்னை அணியில் எடுக்கவில்லை. அணியில் இருந்து கழற்றி விடப்பட்டேன். உடனே நான் அணியின் கேப்டன் தோனியிடம் இரண்டு முறை சென்று என்னை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் 'நான் சரியான கலவையில் பொருந்தவில்லை' என்று கூறினார். நீங்கள் சிறப்பாக விளையாடினால் மட்டும் போதாது. அணி தேர்வில் விரும்பப்படும் நபராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அணியின் பிளேயிங் லெவனை கேப்டன்தான் முடிவு செய்கிறார்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''அந்த நேரத்தில் நானாக முடிவெடுத்து ஓய்வு கேட்டதாக தகவல் பரவியது. நானாக சென்று ஓய்வு கேட்கவில்லை. அப்போது நான் 10 டெஸ்ட் கூட விளையாடி முடிக்கவில்லை. பிறகு எப்படி நானாக சென்று ஓய்வு கேட்பேன்? இது குறித்து நான் பயிற்சியாளரிடம் திரும்பத் திரும்ப கேட்டபோது, நாங்கள் உங்களுக்கு ஓய்வு கொடுக்கிறோம் என்று பயிற்சியாளரிடம் என்னிடம் தெரிவித்தார்'' என்று கூறினார்.
தோனி தலைமையில் மட்டுமின்றி தனது நெருங்கிய நண்பரான விராட் கோலி தலைமையிலும் தான் அணியில் ஓரம்கட்டப்பட்டதாக அமித் மிஸ்ரா வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், ''ஐபிஎல்லில் நான் ஆர்சிபி அணிக்காக விளையாடியபோது, இந்திய அணியில் எனது நிலை என்ன? என்பது குறித்து விராட் கோலியிடம் கேட்டேன். அதற்கு அவர், 'உங்களிடம் தெரியப்படுத்துகிறேன்' என்றார்.
பின்னர் 2016ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் நான் கம்பேக் கொடுக்க விராட் கோலி உதவினார். அந்த தொடருக்கு முன்பாக என்னிடம் பேசிய கோலி, ''இன்று முதல் நீங்கள் என்னைபோல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்' என்றார். அதற்கு நான், ''உங்களைபோல் என்னால் உடற்பயிற்சி செய்ய முடியாது. ஆனால் என்னால் ஓட முடியும். நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவேன்'' என்றேன்.
ஆனால் அப்போது துரதிருஷ்டவசமாக நான் காயம் அடைந்தேன். பின்னர் காயம் குணமடைந்து அணியில் இடம்பிடிப்பது குறித்து அவருக்கு குறும்செய்தி அனுப்பினேன். அதற்கு உங்களிடம் தெரியப்படுத்துகிறோம் என்று கூறிய கோலி, அதன்பிறகு ஏதும் பதில் அளிக்கவில்லை. ரோகித் சர்மா இப்போது என்னை பார்த்தாலும் முன்புபோல் என்னை கிண்டல் செய்கிறார்; பேசுகிறார். ஆனால் கோலி அப்படி இல்லை. இப்போது ரொம்பவே மாறி விட்டார்'' என்று அமித்மிஸ்ரா வேதனையுடன் தெரிவித்தார்.
அமித் மிஸ்ரா இந்திய அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 36 ஒருநாள் போட்டியில் விளையாடி 64 விக்கெட்களும், 10 டி20 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?